முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா: ஜனாதிபதி நேரில் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - முன்னாள் பிரதமரும் பாஜகவின் நிறுவனர்களில் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு(90) நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் இல்லத்துக்கு சென்று வழங்கி கவுரவித்தார்.  வாஜ்பாய் உடல்நலம் குன்றி இருப்பதால், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மரபுகளை மீறி அவரது வீட்டுக்கே சென்று இந்த விருதை வழங்கி கவுரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த 1998 முதல் 2004ம் ஆண்டு வரை பிரதமர் பதவி வகித்துள்ள வாஜ்பாய், 5 ஆண்டு பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். பாஜகவின் மிதவாத தலைவராக விளங்கிய இவர், உடல்நலக் குறைவு காரணமாக தற்போது பொது வாழ்க்கையிலிருந்து விலகி உள்ளார்.
விருது வழங்கும் நிகழ்ச்சி முடிந்தவுடன், வாஜ்பாய் வீட்டில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இதில் மத்திய அமைச்சர்கள், காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் உட்பட மற்ற மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா வழங்கப்பட்ட இந்த நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்று பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும் ஜனாதிபதியின் இந்தச் செயல் கவுரவத்தையும், கருணையையும் பிரதிபலிக்கிறது. இதற்காக ஜனாதிபதிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மோடி தெரிவித்தார்.

இந்தியாவில் என்னைப் போன்ற கோடிக்கணக்கான தொண்டர்களுக்கு வாஜ்பாய் அகத்தூண்டுதலாக இருந்துள்ளார். இனிவரும் தலைமுறைகளுக்கும் அவர் தொடர்ந்து தூண்டுகோலாக இருப்பார். அவர் தொடர்ந்து தூண்டுகோலாக இருக்க நான் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன் என்றார் மோடி. பாரத ரத்னா விருது அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட 43 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து