முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சியால் விவசாயிகள் தற்கொலை

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015      வர்த்தகம்
Image Unavailable

கொல்கத்தா - மேற்கு வங்காளத்தில் உருளைக் கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டனர். நாட்டிலேயே உத்தரபிரதேசத்துக்கு அடுத்தபடியாக மேற்குவங்காளத்தில்தான் உருளைக்கிழங்கு அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு 2வது இடம் வகிக்கிறது. மேற்கு வங்காளத்தில் ஹூக்ளி, பாட்வான்,பங்குரா ஆகிய மாவட்டங்களில்தான் உருளைக்கிழங்கு சாகுபடி அதிகம் நடக்கிறது. இந்த ஆண்டு உருளைக்கிழங்குக்கு போதிய விலை கிடைக்காததால் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஹூக்ளி மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 6 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

கொல்கத்தா மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சில வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ. 35க்கு விற்றது. இதே போல் ஒடிசா, ஜார்கண்ட், பீகார் மாநிலங்களிலும் அதே அளவுக்கு உருளைக்கிழங்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது கொல்கத்தாவிலும் சுற்றுப்பகுதிகளிலும் உருளைக்கிழங்கு விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ. 3, ரூ. 4 என விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையான நஷ்டத்துக்கு ஆளானார்கள். ஆயிரக்கணக்கில் கடன் வாங்கி உருளைக்கிழங்கு பயிரிட்ட விவசாயிகள் கடனை திருப்பி செலுத்த முடியாமலும், தொடர்ந்து அன்றாட வாழ்க்கையை கூட நடத்த முடியாமலும் தற்கொலை முடிவை தேடி கொள்கிறார்கள்.

மேற்கு வங்காளத்தில் 2013ம் ஆண்டில் 85 லட்சம் டன் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்பட்டது. அப்போது உ.பி.யில் விளைச்சல் குறைந்ததால் பக்கத்து மாநிலங்களில் உருளைக்கிழங்கு தேவை அதிகரித்ததால் மேற்குவங்காள உருளைக்கிழங்குக்கு நல்ல விலை கிடைத்தது. விவசாயிகள் அதிக லாபம் சம்பாதித்தனர். ஆனால் மேற்குவங்காளத்தில் விலைவாசியை குறைக்கும் நடவடிக்கையாக முதல்வர் மம்தா பானர்ஜி பக்கத்து மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு ஏற்றுமதிக்கு தடை விதித்தார். இதனால் அங்கு விலை வீழ்ச்சி அடைந்ததாக புகார் கூறப்படுகிறது.

கடந்த முறை நல்ல விலை கிடைத்ததால் இந்த ஆண்டு கூடுதலாக 4 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டது. அதிகளவில் விளைச்சல் செய்யப்பட்டதும் விலை வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. வழக்கத்தை விட இந்த ஆண்டு 120 லட்சம் டன் உருளைக்கிழங்கு விளைச்சல் ஏற்பட்டதாகவும் அது சராசரியை விட 20 சதவீதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விவசாயிகளை பாதுகாக்க கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு பதில் அளிக்குமாறு கோர்ட் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே மேற்குவங்காளத்தின் ஜல்பை குரி மாவட்டத்தில் நாக்ரகட்டா என்ற இடத்தில் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயர் நிருத்ய பர்மன். இவர் தனது அறையில் தூக்கு போட்டு கொண்டார். அவரது குடும்பத்தினர் கூறும் போது, உருளைக்கிழங்கு பயிரிட வங்கியில் இருந்து கடன் வாங்கி இருந்தார். விலை வீழ்ச்சியால் நஷ்டம் ஏற்பட்டு கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து