முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியுடன் தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு

சனிக்கிழமை, 28 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகம் அணைகள் கட்ட முயல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கண்டனம் தெரிவித்தும் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று அதிமுக எம்.பி.க்கள் உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் 55 பேர் சந்தித்து சட்டமன்ற தீர்மானம் குறித்து எடுத்துரைத்து மனுவும் அளித்தனர். அப்போது கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரதமர் மோடியும் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பு குறித்து தமிழக அரசின் செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

கர்நாடக அரசு, 2015-2016ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், மேகதாதுவில் புதிய அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதையடுத்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 27.3.2015 அன்று பின்வரும் தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றியது. 

காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையின் படி, காவேரியில் தமிழகத்திற்கு உரிய நீரை மாதாந்திர வாரியாகப் பெறுவதற்கு காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணைக்கு முரணான வகையில் கர்நாடக அரசு மேகதாதுவில் இரண்டு புதிய அணைகள் கட்ட முயற்சிப்பதையும், குடிநீர் வழங்கல் என்ற போர்வையில் காவேரி நீரவாரி நிகமம் வாயிலாக மேற்கொள்ளவுள்ள திட்டங்களையும், தடுத்து நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும்; காவேரி மேலாண்மை வாரியம் செயலாக்கத்திற்கு வரும் வரையிலும் மற்றும் தமிழ்நாட்டின் அனுமதியின்றியும் மேகதாதுவில் அணைகள் கட்டும் திட்டம் போன்ற எந்த ஒரு திட்டத்தையும் கர்நாடகம் செயல்படுத்த முனையக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகள் மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும்; 5.12.2014 அன்று இந்த மாமன்றத்தால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்து வருவதற்கு  இந்த மாமன்றம் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் எதிர்ப்பையும்  தெரிவித்துக் கொள்கிறது. 

மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததன் காரணமாக, தமிழகத்தின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை  தயாரிக்க 25 கோடி ரூபாயை கர்நாடக அரசு தனது நிதி நிலை அறிக்கையில்  ஒதுக்கி உள்ளதற்கு இந்த மாமன்றம் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறது. 

கர்நாடக அரசு, மேகதாது நீர்மின் திட்டம் மற்றும் வேறு பல திட்டங்களை எடுத்துக் கொள்வதை நிறுத்தி வைக்கும்படி கர்நாடகத்திற்கு அறிவுரை வழங்க  புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அன்றைய பாரத பிரதமர் அவர்களை 2.9.2013 அன்று கடிதம் வாயிலாக  வலியுறுத்தி கேட்டுக் கொண்டதற்கும், கர்நாடக அரசு, காவேரி நீரவாரி நிகமம் என்ற அமைப்பின் மூலமாக, பல நவீனமயமாக்கும் திட்டங்களை நிறுத்தி வைக்க, கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்கும்படி பாரதப் பிரதமருக்கு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 3.9.2013 அன்று  கடிதம் அனுப்பியதற்கும்; காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையிலும் தமிழகத்தின் அனுமதியில்லாமலும் இத்திட்டங்களை கர்நாடகம் மேற்கொள்ள தடை விதிக்க கோரியும், மேல்முறையீட்டு மனுக்களில் தீர்வு ஏற்படும் வரையிலும்,  காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையிலும் தற்போதைய நிலை  கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவு வழங்கவும் கோரி ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி  11.4.2014 அன்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ளதற்கும்; மேகதாதுவில் புதிய அணைகள் கட்ட தொழில் நுட்ப சாத்திய அறிக்கை தயார் செய்வதற்காக கர்நாடக அரசின் விருப்பம்  கோரும் அறிவிப்பை நிறுத்தி வைத்திடவும்  குடிநீர் வழங்கல் என்ற போர்வையின் அடிப்படையில் எந்த ஒரு திட்டத்தையும் கர்நாடக அரசு தமிழ்நாட்டின் இசைவு பெறாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்கவும் பாரதப் பிரதமர் அவர்களை தமிழக முதல்வர் அவர்கள் 12.11.2014 அன்று நாளிட்ட கடிதத்தில் கேட்டுக் கொண்டதற்கும்; இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 18.11.2014 அன்று இடைக்கால மனு ஒன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தமைக்கும்; மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்காக ஒரு விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு  கர்நாடக அரசு தனது 2015-2016 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கம் செய்ததை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல், எந்த திட்டத்தையும் கர்நாடகம் செயலாக்கத்திற்கு  எடுத்துக் கொள்ளக் கூடாது என அறிவுரை வழங்க 21.3.2015 அன்று தமிழக முதல்வர் பாரதப் பிரதமர் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்திற்கும்; இது தொடர்பாக 26.3.2015 அன்று  மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ததற்கும்; தனது பாராட்டுதலையும், நன்றியையும் இந்த மாமான்றம் தெரிவித்துக் கொள்கிறது.

மேகதாதுவில் புதிய அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை கர்நாடகத்தால்  தயாரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு உரிய  நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்றும்; காவேரி மேலாண்மை வாரியம் செயலாக்கத்திற்கு வரும் வரையிலும் மற்றும் தமிழ்நாட்டின் அனுமதியின்றியும் மேகதாதுவில் அணை, நீர்த்தேக்கம் போன்ற எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு எந்த ஒரு நடவடிக்கையையும் கர்நாடக அரசு எடுக்கக் கூடாது என கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகள் மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும்; காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை இந்த மாமன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.”

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தின் மீது  உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி  மக்களவைத் துணைச் சபாநாயகர் டாக்டர் மு. தம்பிதுரை தலைமையில், அ.இ.அ.தி.மு.கவைச்  சார்ந்த  48 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தி.மு.கவைச் சார்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள்   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்;  பா.ம.கவைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் புதுச்சேரியைச் சார்ந்த என்.ஆர்.காங்கிரஸ்யைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் என மொத்தம் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  28.3.2015 அன்று மாலை 5.30 மணியளவில் பாரதப் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து,  தமிழ்நாடு சட்டமன்றம் 27.3.2015 அன்று ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை பாரதப் பிரதமர் அவர்களிடம் வழங்கினர்.

புரட்சித் தலைவி அம்மா அவர்கள், காவேரி நதிநீர் பிரச்சினையில், உச்ச நீதிமன்றத்தின் ஆணையை பெறுவதற்கு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துரைத்தனர். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையால் 27.3.2015 அன்று காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைபடுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டியும் மற்றும் கர்நாடக அரசு மேகதாதுவில்  அணை  கட்டுவதற்கு மேற்கொண்டுவரும் நடவடிக்கையை தடுப்பது குறித்தும்  நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை  விளக்கினர். பாரதப் பிரதமர்  சம்மந்தப்பட்ட  துறையிடம் தற்போதைய நிலைகுறித்த அனைத்து விவரங்களையும் சேகரிக்க ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதாகவும் மற்றும் இது குறித்து மேலும் பரிசீலிப்பதாகவும்  நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, பிரதமரின் சந்திப்புக்கு பிறகு டாக்டர் தம்பிதுரை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மேகதாது அணை பற்றியும் அதை தடுக்க வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்தியதாகவும் இந்த சந்திப்பின் போது தமிழக எம்.பிக்கள் அனைவரும் இருந்ததாகவும் டாக்டர் தம்பிதுரை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து