முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை

சனிக்கிழமை, 28 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

மதுரை - செல்போனில் பேசாததால் மனைவி இறந்ததற்கு தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உட்பட 3 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள வெங்கட்டாப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கிடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதி குடும்பத் தகராறு ஏற்பட்டது. அப்போது மனைவியிடம் சண்டையிட்ட கணவர் கார்த்திக் செல்போனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து அவரது செல்போனில் மனைவி அழைத்துள்ளார். ஆனால் கார்த்திக் அதனை எடுக்கவில்லை. மேலும் தனது செல்போனை சுவிட்ச்ஆப் செய்து விட்டார்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் கவிதா மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கார்த்திக், அவரது தந்தை முத்து, தாய் ராணி ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தனர். கார்த்திக் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யாமல் இருந்திருந்தால் கவிதா இறந்திருக்க மாட்டார் என குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்த போலீசார் தற்கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் இந்த வழக்கை பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கினை ரத்து செய்ய கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் கார்த்திக் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சி.பி. செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கார்த்திக் தரப்பில் வக்கீல் காந்தி ஆஜரானார். அவர் கூறுகையில், கவிதா இயற்கை மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. எனவே தற்கொலைக்கு தூண்டிய வழக்கு பிரிவில் கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது தவறானது. எனவே விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றார். இதனை ஏற்று கொண்ட நீதிபதி சி.பி. செல்வம் வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து