முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை சித்திரை திருவிழா 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை - மதுரை சித்திரை திருவிழா வருகிற 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் 30ம் தேதி நடக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். பிரசித்தி பெற்ற இவ்விழாவை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக வருவார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இவ்விழாவை ஆர்வத்தோடு காண வருவார்கள்.

இந்த சித்திரை திருவிழா வருகிற 21ம் தேதி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று முதல் தினசரி காலை, இரவு நேரங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை பஞ்சமூர்த்திகளுடன் காமதேனு, விருட்சகம், தங்க சப்பரம், யாழி, யானை என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

இச்சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் வரும் 28ம் தேதியும், திக்கு விஜயம் 29ம் தேதியும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்  30ம் தேதியும் கோலாகலமாக நடத்தப்படுகிறது. பின்னர் அன்றிரவு பூப்பல்லக்கில் மாசி வீதிகளில் சுவாமி உலா நடைபெறும். அதன் பிறகு மே மாதம் 1ம் தேதி தேரோட்டம் நடைபெறும். மாசி வீதிகளில் மீனாட்சி ஒரு தேரிலும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் மற்றொரு தேரிலும் வலம் வருவார்கள். மே மாதம் 2ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா நிறைவு பெறுகிறது.

இதை தொடர்ந்து சித்திரை திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் விழா தொடங்குகிறது.இதற்காக மே மாதம் 2ம் தேதி மாலை அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். மறுநாள் 3ம் தேதி மூன்றுமாவடி வரும் கள்ளழகரை பக்தர்கள் வரவேற்று தல்லாகுளம் வரை எதிர்சேவை நடத்துவர். பின்னர் 4ம் தேதி காலை ஆண்டாள் சூடி கொடுத்த மாலையை அழகர் அணிந்து கொண்டு தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்குகிறார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு வண்டியூர் செல்கிறார். அங்குள்ல வீரராகவ பெருமாள் கோவிலில் தங்குகிறார். மறுநாள் 5ம் தேதி வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கிறார்.

அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய  தசாவதார நிகழ்ச்சியும், 6ம் தேதி இரவு தல்லாகுளத்தில் பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. 7ம் தேதி காலை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருந்து அழகர் மலைக்கு கள்ளழகர் புறப்பட்டு செல்கிறார். 8ம் தேதி காலை அழகர்கோவிலுக்கு கள்ளழகர் சென்றடைகிறார். இந்த விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து