முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்கலை., விபத்து: பலியானவர்கள் 5 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம்

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - சட்டசபையில் நேற்று  கேள்வி நேரம் முடிந்ததும் தி.மு.க. சட்டமன்ற தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழக கட்டிடம் இடிந்தது குறித்த பிரச்சினையை எழுப்பினார். உடனே சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பா.ம.க., மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இந்த பிரச்சினை குறித்து என்னிடம் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளனர். அதற்கு முதல்வர்  பதில் அளிப்பார் என்றார்.

இதையடுத்து முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:–

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், நாகக்குடி வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள மத்திய பல்கலைக் கழக வளாகத்தில், மத்திய பொதுப் பணித் துறை சார்பில் விருந்தினர் மாளிகை கட்டட கட்டுமானப் பணி நடந்து வருகிறது.  இந்தக் கட்டடங்கள் கட்டும் பணியை ஐதராபாத்தை சேர்ந்த D.E.C.Infrastruture and Projects (India) Pvt. Ltd என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. 

29.3.2015 அன்று காலை சுமார் 9 மணியளவில், விருந்தினர் மாளிகைக்கான கட்டடத்தில், மூன்றாம் தளத்தில், மேற்கூரை கான்கீரிட் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.  இந்த விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த 21 பணியாளர்கள், கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
 
இச்சம்பவம் குறித்து, தகவலறிந்ததும், காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், வருவாய் துறையினர், பொதுப் பணித் துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.  மத்திய மண்டலக் காவல் துறை தலைவர், தஞ்சாவூர் காவல் துறை துணைத் தலைவர், திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர், திருவாரூர் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டனர். 

மாநிலப் பொதுப் பணித் துறையின் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் 3 செயற் பொறியாளர்கள், 3 உதவி செயற் பொறியாளர்கள், 5 உதவி பொறியாளர்கள், 12 பணி மேற்பார்வையாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் துஊக்ஷ இயந்திரங்கள் உள்ளிட்ட  தேவையான உபகரணங்களுடன் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கட்டட இடிபாட்டில் சிக்கிய 21 பேர் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ்கள் மூலம்  திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.  இவர்களில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.  16 தொழிலாளர்களுக்கு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 16 பேர்களில் 10 பேர்களுக்கு எலும்பு மற்றும் சிதைந்த காயங்கள் (க்ஷடிநே யனே ஊசரளா iதேரசநைள) ஏற்பட்டுள்ளன. 

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தலைமையில், நரம்பியல், எலும்பு, பொது அறுவை சிகிச்சை, மயக்கவியல் போன்ற 12 சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு மற்றும் பொது மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 60 இதர மருத்துவ பணியாளர்களுடன் காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக, சன்னாநல்லூர் வருவாய் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், நன்னிலம் காவல் நிலையத்தில் கு.எண்.63/15-ல் இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 304 (ii), 336 மற்றும் 338 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  கட்டுமான நிறுவன மேலாளர் மற்றும் களப் பொறியாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் பலியான இருவர் ஒடிசா மாநிலத்தையும், ஒருவர் உத்தரப்பிரதேச மாநிலத்தையும், சேர்ந்தவர்களாவர்.  இரண்டு தொழிலாளர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் இறந்த 5 பேரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா 5 லட்சம் ரூபாய்  நிவாரணத் தொகை வழங்கப்படும்.  காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 16 பேருக்கும், தலா 50,000 ரூபாய் நிவாராணத் தொகை வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து