முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளுக்கு கருணாநிதி இழைத்த துரோகங்கள்: ஓ.பி.எஸ் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தி தனியார் பயன் பெற வழிவகுத்தது முந்தைய தி.மு.க. ஆட்சி;  அப்போது 16 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள், வீட்டு மனைகள், தொழிற்சாலைகளுக்காக மாற்றப்பட்டது என்று சட்டசபையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தனியார் நிறுவனத்திற்காக அண்ணா தி.மு.க. அரசு  எந்த நிலத்தையும் கையகப்படுத்துவதில்லை என்றும் அவர் கூறினார்.
ஜெயலலிதாவை பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கு தமிழக மக்களுக்கு எது நன்மை பயக்கக்கூடியதோ அதனை மட்டுமே ஆதரிப்பார் என்று பன்னீர்செல்வம் கூறினார்.அ,தி.மு.க.திருத்தங்களை ஏற்றுக்கொண்டதால்தான் மசோதாவைஆதரித்தோம் என்றும்பன்னீர்செல்வம் கூறினார்.

சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலகிருஷ்ணன் பேசினார். அப்போது மத்திய அரசு கொண்டு வந்த நில கையகப்படுத்தும் மசோதா பற்றி குறிப்பிட்டு பேசிக் கொண்டிருந்தார். இந்த மசோதாவுக்கு அண்ணா தி.மு.க. ஆதரவு அளித்தது பற்றியும் அவர் குறிப்பிட்டபோது, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  நீண்ட விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–   

விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் அனுமதி அளிப்பதை அஇஅதிமுக ஒரு போதும் அனுமதிக்காது என்பதை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளார்கள்.  அந்த அடிப்படையில் தான் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்து சட்டம் இயற்றிய போதும் அதனை செயல்படுத்துவதற்கான  அதிகாரம் மாநில அரசுக்குத் தான் இருக்கிறது என்பதால் அதனை தமிழ்நாட்டில் தடுத்து நிறுத்துவோம் என உறுதிபட தெரிவித்து, அதன்படியே இது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

அதே போன்று, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் பரிசோதனையை மத்திய அரசு அனுமதித்தாலும், மாநிலத்தில் அதற்கான அனுமதியை வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது.  அந்த அடிப்படையிலே தான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மூலம் செய்யப்படும் ஆராய்ச்சி தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்ற திடமான முடிவை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எடுத்து இன்றும் அது தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

‘நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை’ சட்டத்தில் திருத்தங்களை மத்திய அரசு மக்களைவையில் தாக்கல் செய்தது பற்றி திமுக தலைவர் திரு.கருணாநிதி மத்திய அரசின் இந்த திருத்தச் சட்டம் விவசாயிகளுக்கு எதிராகவும், தொழிலதிபர்களுக்கும், பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவானது என்றும், சொந்த நிலத்தின் மீது விவசாயிகளுக்குள்ள அடிப்படை உரிமையை இந்தச் சட்டம் எடுத்து விடுவதாகவும் 26.2.2015 அன்று கேள்வி பதில் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொழில் நிறுவனங்களுக்காக நில எடுப்பு பற்றி கருத்து தெரிவிப்பதற்கு தி.மு.க.வுக்கும்  திரு.கருணாநிதிக்கும் எந்தவித அருகதையும் இல்லை. ஏனெனில், ‘தமிழ்நாடு தொழிலியல் துறைக்கான நோக்கங்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்துதல் சட்டம்’  என்ற சட்ட முன்வடிவு 1997-ஆம் ஆண்டு சட்டமன்றத்திலே அறிமுகம் செய்யப்பட்டு, அது 1999 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டுள்ளது.  இதனை சட்டமாக்கியது அன்றைய திமுக அரசு தான். இந்த சட்டம், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் வழிமுறைகளைக் குறைத்து, விரைவான முறையில் நிலத்தை கையகப்படுத்தும் பொருட்டு இயற்றப்பட்டதாகும். 

எனவே தான் அந்த சட்டமுன்வடிவில் நோக்க காரண விளக்க உரையில், ‘இம்மாநிலத்தில் தொழில் நோக்கங்களுக்காக நிலங்களை விரைவான முறையில் கையகப்படுத்தும் பொருட்டு தேவையான சட்டம் இயற்றப்படுவதன் வாயிலாக இந்நேர்வில் தனி வகைமுறைகள் செய்ய வேண்டுமென அரசு முடிவு செய்துள்ளது.  இச்சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகின்றது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  
தொழிற்சாலைகளுக்காக, நடைமுறையில் இருந்த நில எடுப்புச் சட்டக் கூறுகளை எளிமைப்படுத்தி, ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்த திமுகவும், அதன் தலைவர் திரு.கருணாநிதியும் தற்போதைய சட்ட திருத்தத்தை குறை கூறுவது வேடிக்கையாக உள்ளது. 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் தமிழ்நாடு தொழிலியல் துறைக்கான நோக்கங்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்துதல்  சட்டத்தின்  கீழ் தொழிலகங்களுக்காக சுமார் 11,400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
 
முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் சாமானிய மக்களின் நிலம் எவ்வாறெல்லாம் அபகரிக்கப்பட்டது என்பதும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் நிறுவனங்கள், வீட்டுமனை மேம்படுத்துவோர் ஆகியோர் விவசாயிகளிடம் இருந்து விவசாய நிலங்களை தட்டி பறிப்பதற்கு  எவ்வாறெல்லாம் துணைபுரிந்தனர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.  முந்தைய மைனாரிட்டி திமுக அரசின் ஆட்சிக் காலத்தில் 2006 முதல் 2011 வரை சுமார் 16,000 ஏக்கர் விளை நிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளுக்காகவும், இதர பயன்பாட்டிற்காகவும்   மாற்றம் செய்துள்ளனர்.
 
முந்தைய மைனாரிட்டி திமுக அரசு நில எடுப்பு சட்ட விதிகள் எதையும் பின்பற்றாமலேயே விவசாயிகளிடமிருந்து நிலத்தை எடுத்துக் கொண்ட நிகழ்வுகளும் உண்டு.  தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கு எந்த சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் முந்தைய மைனாரிட்டி திமுக அரசு நிலத்தை எடுத்துவிட்டது.  இந்த திட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் நிலைகளுக்கான 190 ஏக்கர் நிலங்களை சட்டப்படி கையகப்படுத்தி அதற்கான இழப்பீட்டுத் தொகையையும் வழங்கியது அஇஅதிமுக அரசு தான். 

முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசால் 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்படி விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முன் 80 சதவீத விவசாயிகளின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும்; நிலத்தை கையகப்படுத்தும் போது அந்த நிலம் விவசாயம் செய்வதற்கு தகுதி வாய்ந்த நிலமா என்று கவனிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது என கூறுவது தவறு.  பொது நலத்திற்காக அரசு-தனியார் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், பொது நலன் காரணமாக தனியார் கம்பெனிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் போது மட்டும் தான் விவசாயிகளின் ஒப்புதல் பற்றி 2013-ஆம் ஆண்டைய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தனியார் கம்பெனிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் போது பாதிக்கப்படும் குடும்பங்களில் 80 சதவீதம் பேரிடமும், அரசு-தனியார் கூட்டுத் திட்டங்களுக்கு 70 சதவீதம் பேரிடமும் ஒப்புதல் பெறப்பட  வேண்டும் என்று தான் உள்ளது.  தற்போதைய சட்டத்தில் குறிப்பிட்ட 5 வகை நில எடுப்புகளுக்கு இது முற்றிலுமாக கைவிடப்பட்டதாகக் கூறுவது சரியல்ல. அதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது தான் உண்மை.
 
தனியார் கம்பெனிகளுக்கு தமிழகத்தில் நிலம் கையகப்படுத்தப்படவில்லை என்று மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கூறியுள்ளதற்கு தொழில் வளாகம் என்றால்  தனியார் நிறுவனங்களுக்குத் தானே  நில மதிப்பை வசூல் செய்து கொண்டு நிலம் வழங்கப்பட்டு வருகிறது என திரு.கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ‘சிப்காட்’ தொழிற்சாலைக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலங்கள் கையகப்படுத்த ஆணைகள் வெளியிடப்படவில்லையா? எனவும் திரு.கருணாநிதி ஒரு கேள்வி-பதில் அறிக்கையில் கேட்டுள்ளார்.

தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கு டிட்கோ, சிப்காட், சிட்கோ போன்ற நிறுவனங்கள் நிலம் கையகப்படுத்துவது தனியார் தொழிற்சாலைகளுக்காக நிலம் கையகப்படுத்துவதாக ஆகாது.  டிட்கோ, சிப்காட், சிட்கோ போன்ற நிறுவனங்கள் எந்த ஒரு தனியார் தொழிற்சாலைக்கும் நிலங்களை கையகப்படுத்துவதில்லை; தொழில் பூங்காக்கள் அமைப்பதற்காகத் தான் நிலங்களை கையகப்படுத்துகின்றன. தொழில் பூங்காக்களில் தொழிற்சாலைகளுக்கு நிலங்கள் வழங்கப்படும் போது நில மதிப்பு பெறப்படுவதுடன்,  அந்த நிலம் குத்தகைக்கு தான் விடப்படுகிறது. 

தனியாருக்கு சொந்தமாக அந்த நிலம் வழங்கப்படுவதில்லை. அந்த நிலத்தை தனியார் தொழிற்சாலை தனது சொத்தாக பாவிக்க இயலாது.  அது போன்று தனது சொத்து மதிப்பீட்டிலும் சேர்க்க இயலாது. இது போன்று தொழில் பூங்காக்களுக்கு நிலம் கையகப்படுத்த 2013 ஆம் ஆண்டைய சட்டத்திலேயே  வழிவகை செய்யப்பட்டுள்ளது.  அவ்வாறு, நில எடுப்பு செய்யப்படும் போது விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என அந்த சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. எனவே, தற்போது விவசாயிகள் ஒப்புதல் பெறப்படவேண்டும் என்ற ஷரத்து நீக்கப்பட்டுவிட்டதாக சொல்வது சரியல்ல.

தனியார் கம்பெனிகளுக்காக நிலம் எடுக்கப்படும் போது தான்  பாதிக்கப்படும் குடும்பங்களில் 80 சதவீத பேரிடமும் அரசு மற்றும் தனியார் கூட்டு திட்டங்களுக்கு 70 சதவீத பேரிடமும் ஒப்புதல் பெற வேண்டும் என 2013-ஆம் ஆண்டைய  சட்டத்தில் இருந்தது.  எனவே, அரசு சார்பில்  தொழில் பூங்காக்களுக்காக அல்லது உள்கட்டமைப்பு வசதிகளுக்காக நிலம் கையகப்படுத்தும்போது பாதிக்கப்படுவோரின் ஒப்புதல் பெறப்படவேண்டும் என 2013-ஆம் ஆண்டைய சட்டத்திலேயே வரையறை இல்லை.  எனவே, அரசு சார்பில்  தொழில் பூங்காக்களுக்காக கையகப்படுத்தும் நிலத்தை, தனியார் கம்பெனிகளுக்காகவோ, அரசு மற்றும் தனியார் கூட்டு திட்டங்களுக்காகவோ கையகப்படுத்தும் நிலங்களுடன் ஒப்பிட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது எனவும் சட்டங்களை படித்து சரியான பொருள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அ.இ.அ.தி.மு.க அரசை பொறுத்த வரையில்  எந்தவொரு தனியார் நிறுவனத்திற்கெனவும் அ.இ.அ.தி.மு.க அரசு எந்த நிலத்தையும் கையகப்படுத்துவது இல்லை.  தொழில் பூங்காக்களுக்காக நிலம் கையகப்படுத்துவது பொது காரியங்களுக்காகத் தானே அன்றி, எந்தவொரு தனியாருக்காகவும் அல்ல. ஆனால், திமுக ஆட்சியில் தனியாருக்காக நிலம் கையகப்படுத்த பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.  இது குறித்து, இரண்டு உதாரணங்களை இங்கே  தெரிவிக்க விரும்புகிறேன். 

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி  நிறுவனம் மூலம்  ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு முந்தைய மைனாரிட்டி தி.மு.க அரசு 25.1.2007 அன்று 2,937 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த உத்தரவிட்டது.  இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தை ஏற்படுத்த டிட்கோ நிறுவனம் ழுஏமு குழுமத்தை தனது பங்குதாரராக தெரிவு செய்து ஒரு சிறப்பு நோக்கு சாதனம் ஏற்படுத்தப்பட்டு 2,900 ஏக்கர் பேச்சுவார்த்தை மூலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நோக்கு சாதனத்தில் ஏறத்தாழ மொத்த பங்குகளுமே
ழுஏமு குழுமத்தைச் சார்ந்ததாகும். டிட்கோ நிறுவனமே நில எடுப்பு செய்திருந்தால், 2,900 ஏக்கர் நிலம் அரசுடமையாகவே இருந்திருக்கும்.  தனியார் தொழில் நிறுவனம் குத்தகைதாரராக மட்டுமே இருந்திருக்கும்.  ஆனால் தனியார் தொழில் நிறுவனமே இந்த நிலத்தின் முழு உடைமைதாரராக ஆகிவிட்டபடியால்,  இந்த நிலத்தை அவர்கள் எப்படி வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
1998 ஆம் ஆண்டு அப்போதைய தி.மு.க. அரசு மகேந்திரா தொழில் பூங்காவுக்கென 827 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிட்டது.  46 ஏக்கர் மட்டும் அரசால் கையகப்படுத்தப்பட்டது.  மொத்தத்தில் 1,530 ஏக்கர் நிலத்தை மகேந்திரா நிறுவனம் பேச்சுவார்த்தை மூலம் வாங்கியது. இவ்வாறு உருவாக்கப்பட்ட தொழில் பூங்காவில் 841 ஏக்கர் நிலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாகிட அரசு ஒப்புதலளித்து 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் மகேந்திரா தனது வணிக செயலாக்கத்தை துவக்கியது.  இதன் பிறகு, கூட்டுமுயற்சி நிறவனம், செய்முறை இல்லாத பகுதியில் குடியிருப்பு கட்டமைப்புகளை உருவாக்கிட இந்திய அரசாங்கத்தின் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் குழுமத்திடம் 2007 ஆம் ஆண்டு ஒப்புதல் பெற்று 242 ஏக்கர் நிலத்தை இரண்டு உடன் வளர்ச்சியாளர்களிடம் ஒப்படைத்தது. 

இதில் ஒரு உடன் வளர்ச்சியாளரான மகேந்திரா ஜஸ்கோ 21.5 ஏக்கர் நிலத்தில் உருவாக்கிய குடியிருப்புத் திட்டம் ஜுலை 2007-ல் முடிவடைந்தது. சிறப்பு பொருளாதார மண்டல விதி எண்.10-ன் படி காலியான எந்த நிலமும் குழுமத்தின் ஒப்புதல் பெற்ற உடன் வளர்ச்சியாளரைத் தவிர வேறு எவருக்கும் குத்தகைக்கு விடக் கூடாது.  ஜஸ்கோ 103 நபர்களுக்கு 2006 முதல் 2008 வரை காலி நிலத்தை நிலையான குத்தகைக்கு (ஞநசயீநவரயட டுநயளந) விட்டுள்ளது.  இதன் மூலம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள மனை நிலம் தனிநபருக்கு நிலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது; இச்செய்கை சிறப்பு பொருளாதார மண்டல விதிகளுக்கு புறம்பானதாகும். இது இந்திய தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.  நிலங்களை அரசே கையகப்படுத்தியிருந்தால் இது போன்ற நிலை ஏற்பட்டிருக்காது.

நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு, அதனடிப்படையில், தனியாரோ அல்லது  தனியார் பெரும்பான்மை பங்கு வகிக்கும் கூட்டு முயற்சி சிறப்பு நோக்கு சாதனமோ நிலங்களை பேச்சுவார்த்தை மூலம் வாங்க பல நேர்வுகளில் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு வழிவகை செய்துள்ளது.  அதாவது, அரசாணைப்படி நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தால், அரசின் வசமே நிலம் இருந்திருக்கும்.  தனியார் தொழில் நிறுவனம் குத்தகைதாரராக மட்டுமே இருந்திருக்கும்.  தனியார் தொழில் நிறுவனம் அந்த நிலத்தை வேறு எதற்கும் பயன்படுத்தவும் இயலாது. தொழில் துவங்கவில்லையெனில், குத்தகைக்கு அளித்த நிலத்தை அரசே திரும்பப் பெற்றுக் கொள்ளவும் இயலும்.  ஆனால், அவ்வாறு செய்யாமல், விவசாயிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தி தனியார் பயன் பெற வழிவகுத்தது, முந்தைய மைனாரிட்டி தி.மு.க அரசு தான்.

காவேரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு திட்டத்திற்கு அனுமதி அளித்து,  அதற்காக திருவாளர்கள் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு அதற்கான உத்தரவை 1.1.2011 அன்று முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு வழங்கியது.  அந்த நிறுவனத்துடன் 4.1.2011 அன்று  ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குழாய் பதிப்பு பயன்பாட்டிற்கான அனுமதியை பெறுவதற்கும், இதர கட்டமைப்பு வசதிகளுக்கும், தமிழக அரசு உதவி செய்யும் என்ற  ஷரத்தும் உள்ளது.  விவசாயிகள் பாதிப்படையும் வகையில், தொழில் நிறுவனங்களுக்கு நிலத்தைப் பெற்றுக் கொடுக்க இது போன்ற ஒப்பந்தங்களை போட்டது முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு தான்.

மேலும், அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் உடன்குடி அனல் மின் நிலையத்திட்டத்திற்காக தனியார் நிறுவனத்திற்கு 200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவில்லையா? என திரு.கருணாநிதி வினவியுள்ளார்.  உடன்குடி அனல் மின் நிலையத் திட்டம் தனியார் திட்டம் அல்ல.   இதற்கு கையகப்படுத்தப்பட்ட நிலம் தனியார் எவருக்கும் கொடுக்கப்படவில்லை.  இந்த நிலத்தின் உரிமைதாரர் தமிழ்நாடு மின்வாரியம் தான். 

நில எடுப்பு சட்டம் தொடர்பாக திரு.அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு ஒரு சில தலைவர்கள் போல, அரசியல் ஆதாயத்துக்காக திரு.கருணாநிதியும் வலியச் சென்று தனது ஆதரவைத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.  இது போன்ற வேடதாரிகளின் முகமூடியை கிழிக்கும் விதமாகவே, திரு.அன்னா ஹசாரே, """"அரசியல் ரீதியில் காங்கிரஸ் கட்சி ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காகவே, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்  திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தை சோனியா ஆதரிக்கிறார்…… விவசாயிகள் மீது காங்கிரஸுக்கு அக்கறை இருந்திருத்தால், நாடு முழுவதிலும் உள்ள நிலத்தை முழுமையாக கணக்கெடுத்த பிறகு, 2013 ஆம் ஆண்டு நிலம் கையப்படுத்துதல் சட்டத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நிறைவேற்றியிருக்கும்""  என்று சொல்லியுள்ளார்.  மேலும் """"மக்களின் நலனுக்காக நான் எங்கு போராட்டம் நடத்தினாலும் சரி.  அதன் மூலம் எதிர்க்கட்சிகள் ஆதாயம் அடைய முயலுகின்றன"" -  என்று தி.மு.க.வின் உண்மை முகத்தை தோலுரித்தும் காட்டியுள்ளார். 

அது போன்றே, 2013-ஆம் ஆண்டைய சட்டத்தில் விவசாயம் செய்வதற்கு தகுதி வாய்ந்த நிலமா என்பது கவனிக்கப்பட வேண்டும் என்றும், தற்போதைய திருத்தச் சட்டத்தின்படி அவ்வாறு கவனிக்கத் தேவையில்லை என்று சொல்வதும் சரியல்ல. முந்தையச் சட்டத்தில், வேறு நிலம் எதுவும் இல்லை என்கிற போது பாசன வசதியுள்ள பலபோகம் பயிரிடப்படும் நிலம் கையெடுப்பு செய்யலாம் என உள்ளது.  அவ்வாறு செய்யும் போது அதே அளவான சாகுபடிக்கு பயனற்ற நிலம் சாகுபடிக்கு கொண்டுவர வேண்டும் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும்,  மாநிலத்தில் உள்ள நிகர பயிரிடும் பரப்பளவில் எந்த அளவு  நில எடுப்பு செய்யலாம் என சம்பந்தப்பட்ட அரசின்  அறிவிக்கையின் படி நில எடுப்பு செய்யலாம்  எனவும் உள்ளது. எனவே, 2013-ஆம் ஆண்டு சட்டத்தில் விவசாயம் செய்வதற்கு தகுதி வாய்ந்த நிலத்தை கையகப்படுத்திடக் கூடாது என எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

பொதுநலத்திற்கென நிலத்தை கையகப்படுத்துவது  ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாததாகும்.   அவ்வாறு நிலங்கள் உரிய அதிகார அமைப்பாலேயே  கையகப்படுத்தப்படுகிறதா என்பதும் அவ்வாறு நிலங்கள் கையகப்படுத்தும் போது அதற்குரிய  இழப்பீடு வழங்கப்பட்டு நிலத்தை இழந்தவர்களுக்கு மறு வாழ்வும், மறு குடியமர்வும் கிடைக்கிறதா என்பதும் நில எடுப்பின் காரணமாக பொதுநலன் காக்கப்படுகிறதா என்பதும் தான் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும்.

இந்த அடிப்படையிலே தான் தற்போது மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ‘நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறுவாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை’ சட்டத்திற்கான திருத்தம், குறிப்பிட்ட சில  நில எடுப்பு நிகழ்வுகளில்   அத்தியாயம் குறிப்பிடப்பட்டுள்ள சமூக தாக்கத்தை தீர்மானித்தல்   மற்றும் பொதுநலன்  மற்றும் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்பு கூறுகள் ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிப்பதற்கான அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவதாலும்,  தொழில் வளாக வழிக்கு தேவையான நில எடுப்பு, குறிப்பிடப்பட்ட இருப்புப் பாதை மற்றும் சாலையில் இருமருங்கும் ஒரு கிலோ மீட்டர் துhரத்திற்குள் மட்டுமே எடுக்கப்படவேண்டும் என்றும், இந்த குறிப்பிடப்பட்ட திட்டங்களுக்கு குறைந்தபட்ச நிலமே எடுக்கப்பட வேண்டும் என்றும், பயிர் செய்யப்படாத  நிலங்கள் ஆகியவற்றை அளவு செய்து அவற்றின் விவரங்களை தொகுத்து வைத்திருத்தல் வேண்டும் என்றும், நில எடுப்பால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளையெல்லாம் சேர்க்கப்பட்டிருப்பதாலும், தனியார் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு  இந்த விதிமுறைகளின்படி நிலம் கையகப்படுத்த  வழி வகை செய்தது  விலக்கிக் கொள்ளப்பட்டதாலும், இந்த சட்ட திருத்த மசோதா பொது நலனுக்காகவே என்பதால் தான்,  இதனை அஇஅதிமுக மக்களவையில் ஆதரித்தது அம்மா அவர்கள் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து