முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேமுதிக உறுப்பினர்கள் 6 பேருக்கான தண்டனை அடுத்த தொடரிலும் நீடிப்பு

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - கவர்னர் உரை மீதான பொது விவாதம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற போது    அவை விதிகளுக்கு முரணான வகையில் நடைபெற்றதாக தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட தேமுதிக உறுப்பினர்கள் 6 பேருக்கான தண்டனை அடுத்த கூட்டத் தொடர் தொடங்கி 10 நாட்கள் வரையிலும் நீட்டிக்கப்படுவதாக சபாநாயகர் தனபால்  அறிவித்தார்.
உரிமை குழு  எடுத்த  முடிவின் அடிப்படையில் சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் அடிப்படை இந்த தண்டனையை சபாநாயகர் அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 19-ந் தேதி  கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பொது விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி துணை தலைவர் மோகன் ராஜ் சொன்ன ஒரு வார்த்தையை அடுத்து சபையில் பெரும் பிரச்சனை உருவானது. அமைச்சர்கள் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் மோகன்ராஜின் பேச்சை கடுமையாக  எதிர்த்து குரலெழுப்பினார்கள்.

இவர்களுக்கு எதிராக தேமுதிக உறுப்பினர்களும் குரல் எழுப்பினர். அப்போது சபையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. அந்த நேரத்தில் சபாநாயகர் தனபால் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக கூறி தேமுதிக எம்எல்ஏக்களை அவையிலிருந்து வெளியேற்றுமாறு  உத்தரவிட்டார்.  காவலர்கள் தேமுதிக எம்எல்ஏக்களை வெளியேற்ற முற்பட்ட போது தேமுதிக எம்எல்ஏக்கள் சிலர் காவலர்களை தாக்கியதுடன் சபாநாயகரின் இருக்கையையும் தள்ளிவிட்டு, ஆவணங்களையும் சேதப்படுத்தினர். வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டவர்களில் தேமுதிக எம்எல்ஏக்களில் சேகர், தினகரன் ஆகியோர் லாபியில் காவலர்களை  தாக்கினார்கள்.

இதையடுத்து அவை முன்னவர் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் தேமுதிக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் சேகர் மற்றும் தினகரன் மீது காவலர்கள் புகார் அளித்திருந்தனர். பின்னர் சந்திரகுமார், மோகன் ராஜ், பார்த்திபன், வெங்கடேசன், சேகர், தினகரன் ஆகிய 6 பேர் மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வரப்பட்டு அது உரிமை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் உரிமைக்குழு தலைவரும், துணை சபாநாயகருமான  பொள்ளாச்சி ஜெயராமன் உரிமை குழுவின் அறிக்கையை சமர்ப்பித்தார்.  இதை இன்றே ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டு நிறைவேற்ற வேண்டும் என அவை முன்னவர் நத்தம் விஸ்வநாதன் கேட்டு கொண்டார்.

இது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று சபாநாயகர் அவர்களை பேச அனுமதித்தார். திமுக சட்டமன்ற கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டமன்ற கட்சித் தலைவர் சவுந்திரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் சட்டமன்ற கட்சித் தலைவர் ஆறுமுகம், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவஹிருல்லா, பார்வர்டு பிளாக் தலைவர் பி.வி.கதிரவன், காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் பேசினார்கள்.

தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேருக்கு  விதிக்கப்பட்டுள்ள தண்டனை கடுமையானது. அடுத்த கூட்டத்தொடர் தொடங்கி 10 நாட்களுக்கும் அவர்கள் நீக்கப்படுவது வேதனை அளிக்கிறது. எனவே  இதுவரையிலும் அவர்களுக்கு வழக்கப்பட்ட தண்டனை போதும். எனவே இனி வரும் கூட்டத் தொடர்களில் அவர்கள் பங்கேற்கும் வகையில் இந்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று  கேட்டு கொண்டனர். இவர்களை தொடர்ந்து பேசிய அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ், கடந்த திமுக ஆட்சி காலத்தில் நான் கையை உயர்த்தி பேசிய போது என்னை வெளியேற்ற வந்த காவலரின் தொப்பி கீழே விழுந்து விட்டது.  அதை நான் எடுத்து போட்டதற்காக  எனக்கு கடுமையான தண்டனை விதித்தார்கள். 6 மாதங்கள் என்னுடைய எம்எல்ஏ அறை பூட்டப்பட்டு சம்பளம் எதுவும் வழங்கப்படாத நிலை இருந்தது. ஆனால் தேமுதிக எம்எல்ஏக்கள்  கடுமையான குற்றம் செய்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய அவை முன்னவர் நத்தம் விசுவநாதன்,தேமுதிக எம்எல்ஏக்கள் 6  பேர் நடந்து கொண்ட முறையை யாருமே ஏற்கவில்லை. ஆனால் தண்டனையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.  அன்றைக்கு நடந்த செயல் என்பது சட்டமன்ற  பெருமைக்கே களங்கம் விளைவிப்பதாகவும், ஒரு கரும்புள்ளி போலவும் ஆகிவிட்டது. எனவே சபையின் மரபை காக்கவும், ஜனநாயகத்தை காக்கவும் இப்படிப்பட்ட தவறுகள் இனி நடைபெறாமல் இருக்கவுமே  இந்த குறைந்தபட்ச தண்டனை வழங்கப்படுகிறது. எனவே அவை உரிமை குழுவின் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் நிறைவேற்றி தர வேண்டும் என்று கூறினார்.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நேரத்தில் அதை எதிர்த்து திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர்  தீர்மானம் நிறைவேறியதும் பேசிய சபாநாயகர் தனபால் அவை உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு ஆளான தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேரும் அடுத்த கூட்டத் தொடர்  தொடங்கி 10 நாட்களுக்கு நீக்கப்படுகிறார்கள்என்றும் இவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம், ஆதாயங்கள், சலுகைகளை பெற இயலாது என்றும் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து