முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடன்குடி அனல் மின் திட்டம்: தாமதத்திற்கு தி.மு.க.வே காரணம்

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - உடன்குடி அனல் மின் திட்டத்திற்கு எந்தவித அடிப்படை பணிகளையும் செய்யாமல் நேற்று  அண்ணா தி.மு.க. ஆட்சி மீது குறை சொல்வதா? என்று சட்டசபையில் தி.மு.க.வுக்கு மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் கடும் கண்டனம் தெரிவித்தார். உடன்குடி  அனல் மின் நிலைய திட்டத்தை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுத்தவர் அம்மா என்றும் அமைச்சர் கூறினார்.

சட்டசபையில் நேற்று  உடன்குடி அனல் மின் நிலையம் நிறைவேற்றப்படாதது குறித்து மு.க.ஸ்டாலின் (தி.மு.க.),  தங்கவேல் மார்க்சிஸ்ட்,  ஆறுமுகம்  கம்யூனிஸ்ட்,  கணேஷ் குமார்  பா.ம.க.,  ஜவாஹிருல்லாஹ் மனித நேய மக்கள் கட்சி ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்கள்.இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் விளக்கம் அளித்தார்.

உடன்குடி அனல்மின் நிலைய திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு கால தாமதம் ஏன்? டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டது ஏன்? மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரும் சூழ்நிலை ஏற்பட்டது ஏன்? என்றெல்லாம் இங்கே கேட்டார்கள். இது நியாயமான கேள்வி தான். பதில் சொல்ல வேண்டியது அரசு கடமை என்று கூறி அமைச்சர் நத்தம் விசுவநாதன் நீண்ட விளக்கம் அளித்து பேசினார்.

அம்மா ஆட்சிக்கு வந்ததும் 650 மெகாவாட் திறன் கொண்ட 5 யூனிட்டுகளை நிறுவ முடிவு எடுத்து அறிவித்தார். அம்மாவின் பகீரத முயற்சி காரணமாக எண்ணூர் விரிவாக்க திட்டத்தில் 650 மெகாவாட் திறன் கொண்ட ஒரு  அலகு நிறுவ ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் நடந்தன. இதனை தொடர்ந்து 800 சிறப்பு பொளாதார மண்டத்தில் 650 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகள் துவங்க முடிவு செய்யப்பட்டு, அந்த பணிகளும் நடைபெற்று வருகின்றன.
3வது 650 மெகாவாட் திறன் கொண்ட 2 யூனிட் உற்பத்தி செய்வதற்கு டெண்டர்கள் கோரப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.

இங்கு மு.க.ஸ்டாலின் பேசும்போது, 2007ம் ஆண்டு எங்கள் தலைவர் (கருணாநிதி) அறிவித்த திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லையே என்று கேட்டார். 2007ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை நீங்கள் (தி.மு.க.) ஆட்சியில் இருந்தீர்கள். நீங்கள் நினைத்திருந்தால், 4 ஆண்டுகளில் இந்த திட்டத்தை நிறைவேற்றி இருக்க முடியும். நீங்கள் இந்த திட்டத்தை அன்றைக்கே நிறைவேற்றி இருந்தால் இன்றைக்கு இந்த நிலை வந்திருக்காது.

நீங்கள் 4 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? இந்த திட்டத்திற்கு அடிக்கல் மட்டும் நாட்டினீர்கள். வேறு எந்த பணியையும் செய்ய வில்லை. இந்த திட்டத்தை நிறைவேற்ற பெல் நிறுவனத்திற்கு நிலத்தை பெற்று தர வேண்டாமா? தனியாரிடமிருந்து நிலத்தை வாங்க ஒரு வருவாய் அலுவலரை நீங்கள் நியமித்தது உண்டா? 4 ஆண்டுகளாக  நிலத்தை கையகப்படுத்த எந்த நடவடிக்கையும் நீங்கள் எடுக்கவில்லை. உள்நோக்கத்துடன் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டீர்கள்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எரிபொருள் தேவை. அதாவது, இந்த திட்டத்திற்கு நிலக்கரி வாங்குவதற்கு மத்திய அரசிடமிருந்து பெற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மத்தியில் ஆட்சியில் நீங்கள் அங்கம் வகித்தீர்கள். உங்களது செல்வாக்கை பயன்படுத்தி நிலக்கரி பெறுவதற்கு அனுமதி பெற்றிருக்க வேண்டுமா? வேண்டாமா? அதனையும் செய்யவில்லை. 3வது சுற்றுசூழல் அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதி பெறவும் 4 ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் நீங்கள் எடுக்கவில்லை. 4–வதாக பங்கு மூலதனம் பெற நிதி நிறுவனத்தை நீங்கள் கண்டு அறியவில்லை
.
சர்க்கரை என்று தாளில் எழுதி வைத்தால் அது இனிக்குமா? அப்படி தான் நீங்கள் திட்டத்தை அறிவித்து அடிக்கல் நாட்டி விட்டு 4 ஆண்டு காலம் எந்த பணியையும் செய்யவில்லை. (அப்போது மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து கூச்சல் எழுப்பினார்கள்) குற்றம் உள்ள நெஞ்சு ஏன் குறுகுறுக்கிறது. (மீண்டும் தி.மு.க.வினர் கூச்சல்) என்னை பதில் சொல்ல விடுகிறீர்களா? இல்லையா? நீங்கள் குற்றச்சாட்டை சொல்கிறீர்கள்.

அதற்கு நான் பதில் சொல்ல வேண்டாமா? உடன்குடி அனல் மின் திட்டத்திற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்த தாசில்தாரை நியமித்தவர் அம்மா. நிலத்தை கண்டறிய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுற்றுச்சூழல், நிலக்கரி பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையெல்லாம் செய்திருந்தால் பெல் நிறுவனம் பணியை துவக்கி இருக்கும். 4 ஆண்டுகளாக எதையும் நீங்கள் செய்யவில்லை. அப்படியே இந்த திட்டத்தை மறந்து விட்டீர்கள். திட்டத்தை குழித்தோண்டி புதைத்து விட்டீர்கள். (மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு முற்பட்டார்) உங்களால் இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

4 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை. நீங்கள்  கிடப்பில் போட்ட இந்த திட்டத்தை அம்மா கண்டறிந்து இதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார். 24.2.2012 அன்று உடன்குடி அனல்மின் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு பணியாக துவங்கப்பட்டது. வெளிநாட்டிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய 19.11.2012 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. நீங்கள் செய்ய தவறியதை அம்மா செய்திருக்கிறார்.

(தி.மு.க.வினர் மீண்டும் எழுந்து கடும் கூச்சல்) நான் சொல்லும் பதிலை கேளுங்கள். நீங்கள் கூறிய குற்றச்சாட்டுக்கு நான் பதில் சொன்னால் ஏன் உங்களுக்கு கோபம் வருகிறது. என்னை பதில் சொல்ல விடுங்கள். நீங்கள் செய்ய தவறியதை அம்மா செய்திருக்கிறார். உடன்குடி மின் திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்த அம்மா வருவாய் அலுவலரை நியமித்தார். நீங்கள் அந்த நிலத்தை அன்றைக்கே கையகப்படுத்தி இருந்தால்  இன்று இந்த நிலை ஏன்? இதேபோன்று சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு ஒன்றரை ஆண்டு காலம் ஆகி இருக்கிறது. நீங்கள் இதனை அன்றே செய்திருந்தால், இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. (மீண்டும் தி.மு.க.வினர் கடும் கூச்சல்). கூச்சல் போடுவதா?

நான் சொல்வதை கேட்க உங்களுக்கு விருப்பம் இல்லையா? இப்படி கூச்சல் போடுவதை நிறுத்துங்கள். நீங்கள் செய்ய தவறியதை அம்மா செய்திருக்கிறார். உடன்குடி மின் திட்டத்திற்காக 4 நிறுவனங்கள் தொழில் நுட்ப ரீதியான டெண்டர்கள் கொடுத்திருந்தன. தகுதி உள்ள நிறுவனத்தை தேர்வு செய்ய 4 மாத காலம் ஆனது. ஆவனங்களை எல்லாம் சரி பார்க்க வேண்டி இருந்தது. 4 நிறுவனங்களில் சீன  நிறுவனமும், பெல் நிறுவனமும் தகுதி பெற்றிருந்தது. பலமுறை அவர்களை அழைத்து பேசி முடிவு செய்யப்பட்ட பின்னர் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் இறுதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருந்ததால், எந்த பணியையும் செய்ய முடியவில்லை.

2014ம் ஆண்டு 2 நிறுவனங்களின் டெண்டர் விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டது. எண்ணூர் சிறப்பு மண்டலத்தில் அனல் மின் நிலைய திட்டத்தை நிறைவேற்ற பெல் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. உடன்குடி அனல்மின் திட்டத்தை நிறைவேற்ற பெல் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து சீன நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்றது. பெல் நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது. பெல் நிறுவனம் மத்திய அரசு நிறுவனம். புகழ் பெற்ற நிறுவனம். அதனை கறுப்பு பட்டியலில் சேர்க்க முடியுமா? சீன நிறுவனம் நீதிமன்றம் சென்றதால் இந்த திட்டம் மேலும் கால தாமதம் அடைந்தது.

தமிழக மின் வாரியமும் பதில் மனு தாக்கல் செய்தது. இன்று விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கூறுகிறாரா? அந்த கட்சி தலைவர் என்ன சொன்னார் தெரியுமா? பெல் நிறுவனத்தில் 30 ஆயிரம் பேர் பணி புரிகிறார்கள். அது ஒரு பொதுத்துறை நிறுவனம். அந்த நிறுவனத்திற்கு தான் இந்த திட்டத்தை நிறைவேற்ற ஒப்பந்தம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் இன்று நீங்கள் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு? உங்கள் தலைவர் டெண்டர் விடாமலேயே பெல் நிறுவனத்திற்கு  அனல் மின் திட்டத்தை நிறைவேற்ற ஒப்பந்தம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் நீங்கள் இப்போது இப்படி பேசுகிறீர்கள்.

மற்றொரு உறுப்பினர் (பா.ம.க.) சீன நிறுவனத்திற்கு வக்காலத்து வாங்குவது போல் பேசுகிறார். சீன நிறுவனத்தை தூண்டி விட்டு அம்மாவின் திட்டத்தை வர விடாமல் செய்வதற்கு நீங்களே இதுபோன்று செய்கிறீர்களோ? என்று தான் தெரிகிறது. உங்கள் நடவடிக்கை அப்படி தான் தெரிகிறது. அம்மாவின் ஆட்சியில் ஒளிவுமறைவற்ற டெண்டர் தான் விடப்படுகிறது. அரசுத்துறை நிறுவனமாக இருந்தாலும் போட்டியில் கலந்து கொண்டு குறைந்த விலைப்புள்ளி தெரிவித்தால் தான் அந்த நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்க முடியும். பெல் நிறுவனம் என்பதால் சலுகை காட்டவில்லை.

4 ஆண்டுகளாக நீங்கள் (தி.மு.க) முடக்கி வைத்திருந்தீர்கள். ஆனால் இன்று அம்மா எல்லா உதவிகளையும் செய்திருக்கிறார். எந்த உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம். இந்த திட்டம் உரிய காலத்தில் நிறைவேற்ற முடிக்கப்படும். ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு கன்சல்டன்ட் அதாவது கலந்தாலோசகர் வேண்டும். இதற்கு  ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒரு அமைப்பை தேர்ந்தெடுத்தோம். அந்த அமைப்புக்கு இந்தியாவில் பல்வேறு கிளைகள் உள்ளன. சீன  நிறுவனம் மற்றும் பெல் நிறுவன ஒப்பந்தப்புள்ளி  பற்றி கலந்து ஆலோசனை செய்யப்பட்டது.  அந்த நிறுவனம் அனைத்தையும் ஆராய்ந்து அறிக்கைகளை தந்தது.

பெல் நிறுவனம் விலைப்புள்ளியில் என்னென்ன குறைபாடுகள் உள்ளன? சீன  நிறுவனம் விலைப்புள்ளியில் என்னென்ன குறைபாடுகள் உள்ளன? என்று பட்டியலிட்டு அந்த நிறுவனம் அறிக்கை தந்தது. இது பற்றி மின் பகிர்மான கழகம் முடிவு செய்யலாம் என்றும் பரிந்துரைத்தது. பெல் நிறுவனத்திற்கு  கொடுப்பதாக இருந்தால் அவர்கள் குறைகளை சரி செய்ய  வேண்டும். அதேபோன்று சீன நிறுவனமும் குறைகளை சரி செய்ய வேண்டும் என்று ஜெர்மன் நாட்டு கன்சல்டன்ட் நிறுவனம் தெரிவித்தது. ஆனால் ஒன்றுமே செய்யாமல் சீன நிறுவனம் நீதிமன்றம் சென்றது.
அந்த குறைகளை சரி செய்தால் ஏன் நீதிமன்றம் செல்லவேண்டும்? ஒளிவுமறைவு அற்ற ஆட்சி அம்மாவின் ஆட்சி. ( ஜெர்மன் நாட்டு கன்சல்டன்ட் நிறுவனம் அளித்த அறிக்கையை சட்டசபையில் காட்டினார்).

சீன நிறுவனம் நீதிமன்றம் சென்றது. தமிழக மின் வாரியமும் நீதிமன்றத்தில் தனது நிலையை எடுத்து சொன்னது. இந்த நிலையில் இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. இதற்கு பின் ஏன் விசாரணை? மு.க.ஸ்டாலினின் கட்சி தலைவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 3 ஆண்டுகள் தாமதம் ஏன்? என்று அவர் கேட்டிருக்கிறார். டெண்டர் போட்ட தேதியிலிருந்து தான் கணக்கு. 3 ஆண்டுகளும் என்னென்ன பணிகள் செய்யப்பட்டன என்ற முழு விவரத்தையும் எடுத்து சொன்னேன். அடிப்படை பணிகள் அனைத்தையும்   செய்திருக்கிறோம். டெண்டர் போட்டவர்கள் சரியாக அனைத்து நிபந்தனைகளையும் ஏற்று செயல்படுத்தும் வகையில்  போட வேண்டும். சரியாக போடுங்கள் என்று நாங்கள் சொல்ல முடியுமா? அவர்கள் தான் போட வேண்டும். இதற்கு அரசு எப்படி பொறுப்பாகும்.

கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவதற்காக தான் இந்த திட்டம் தாமதப்படுத்தப்படுகிறது என்று முன்னாள் முதலமைச்சர் கூறியிருக்கிறார். உங்கள் ஆட்சியில் தான் அதிக விலைக்கு வாங்கி இருக்கிறீர்கள். நாங்கள் குறைந்த விலைக்கு மின்சாரத்தை வாங்கியிருக்கிறோம். ( இது சம்பந்தமாக புள்ளி விவரங்களை ஒவ்வொன்றாக அமைச்சர்  எடுத்து கூறினார். அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து கூச்சல் எழுப்பினார்கள்.) நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு என்னை பதில் சொல்ல விடுங்கள். நீங்கள் வௌியே சொன்னது தவறு என்று சொல்லுங்கள். நான் விட்டு விடுகிறேன்.

நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் சொல்லக்கூடாதா? ( தொடர்ந்து தி.மு.க.வினர் கூச்சல்) என்று நத்தம் விசுவநாதன் காட்டமாக கேட்டார்.அப்போது முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எழுந்து, ‘உடன்குடி அனல் மின் திட்டத்திற்கு தாமதம் ஏன்? யார் காரணம்? என்று அக்குவேறு ஆணிவேறாக அமைச்சர் சொல்லியிருக்கிறார். கூடுதல் விலைக்கு நீங்கள் மின்சாரம் வாங்கியதையும் புள்ளி விவரங்களோடு அமைச்சர் கூறியிருக்கிறார்.  நீங்கள் கேள்வி கேட்டால், அதற்கு பதில் சொல்ல வேண்டமா? தயவு செய்து அமைச்சர் கூறுவதை கேளுங்கள். வெளிநடப்பு செய்து விடாதீர்கள் என்று கூறினார்.தொடர்ந்து அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.

தி.மு.க. ஆட்சியை விட குறைந்த விலைக்கு தான் என்று மின்சாரம் வெளியிலிருந்து வாங்கப்படுகிறது. நீங்கள் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கினீர்கள். தேர்தல் நேரத்தில் நீங்கள் மிக அதிக விலை கொடுத்து வாங்கினீர்கள். மின்சாரத்தை இப்படி கொள்முதல் செய்துவிட்டு பணத்தைக்கூட தரவில்லை.அம்மா ஆட்சிக்கு வந்தபின் அந்த பணத்தை கொடுத்தார். இப்போது எங்களை பார்த்து குற்றஞ்சாட்டுகிறீர்கள். யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள்? மக்கள் ஏமாளிகள் அல்ல. எத்தனை அறிக்கைகள், உண்மைக்கு மாறான செய்திகளை வௌியிட்டாலும், மக்கள் மத்தியில் அது எடுபடாது. அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கிய நீங்கள் உங்களை போல் எங்களை நினைத்து பேசாதீர்கள் என்று அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து