முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாநிதி - கலாநிதி மாறனின் ரூ.742 கோடி சொத்துகள் முடக்கம்

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு மிரட்டி விற்ற விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரரும் சன் குழும அதிபருமான கலாநிதி மாறன் ஆகியோரது ரூ. 742 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப் பிரிவு அதிரடியாக முடக்கியுள்ளது. சன் குழுமத்தின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்குமாறு அதன் உரிமையாளர் சிவசங்கரனை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக இருந்த போது தயாநிதி மாறன் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழக்கில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையிலும் சி.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் கடந்த மாதம் 2ம் தேதி டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். இதன் பின்னர் இந்த வழக்கு ஆகஸ்ட் 3ம் தேதிக்கு தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அமலாக்கப் பிரிவு, அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் அதிரடியாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோரது ரூ. 742 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி உள்ளது. தற்போது முடக்கப்பட்டதில் சன் குழுமத்தின் பங்குகளும் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட சொத்துக்களின் பட்டியல் வருமாறு:

சன் நெட்வொர்க் டிவி நிறுவன கட்டிடம் மற்றும் காலி இடம் ரூ. 266 கோடி.
கல்காம் நிறுவன கட்டிடம் மற்றும் அதன் காலியிடம் ரூ. 171.55 கோடி
சன் டைரக்ட் பங்குகளும் முடக்கம்
தயாநிதி மாறன், கலாநிதி மாறன், காவேரி கலாநிதி ஆகியோரின் வைப்பு தொகைகள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றில் கலாநிதி மாறனின் நிரந்தர வைப்பு தொகை மட்டும் ரூ. 100 கோடி.
தயாநிதி மாறன் மற்றும் பலரின் வைப்பு தொகை ரூ. 7 கோடி.
காவேரி கலாநிதியின் வைப்பு தொகை ரூ. 1.30 கோடி.

திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் காங்கிரஸ் கூட்டணி அரசில் அமைச்சராக இருந்த போது ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை சிவசங்கரனை மிரட்டி மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றதாக அப்போது பரவலாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த சட்டவிரோத விற்பனை விவகாரத்தில் சன் டி.விக்கு மேக்சிஸ் நிறுவனம் ரூ. 742.58 கோடி லஞ்சமாக கொடுத்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், தயாநிதி மற்றும் கலாநிதி சகோதரர்களிடம் விசாரணை நடத்தியது.

அப்போது சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு பெறப்பட்ட தொகை இவர்களது வர்த்தக தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது. இந்த கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் தற்போது அமலாக்கத் துறை மாறன் சகோதரர்களின் சொத்துக்களை முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக, தயாநிதி, கலாநிதி மாறனின் சொத்துக்கள், சன் குழுமத்தின் சொத்துக்கள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன. ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றதில் விதிமீறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கையை அமலாக்கத்துறை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து