முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'கொம்பன்' படத்துக்கு தடை விதிக்க மதுரை ஐகோர்ட்கிளை மறுப்பு

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2015      சினிமா
Image Unavailable

மதுரை - கார்த்தி நடித்துள்ள கொம்பன் படத்துக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது. கொம்பன் படத்துக்கு எதிரான மனு, நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ். ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 'நீதிபதிகள், தணிக்கை வாரியம் இந்தப் படத்துக்கு ஏற்கெனவே சான்றிதழ் வழங்கியது. ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதாக சென்சார் வாரியம் தெரிவித்துள்ளது.

எனவே, இந்தப் படத்தை நீக்கக் கோரும் இடைக்கால மனுவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. இருப்பினும், பிரதான மனு மீதான விசாரணை ஏப்ரல் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் அறிவித்தனர்.  இதையடுத்து, கொம்பன் திரைப்படம் உடனடியாக திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிகிறது.
முன்னதாக, கொம்பன் படத்துக்கு தடை கோரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கொம்பன் படம் வெளியானால் தென் தமிழகத்தில் சாதி மோதல் ஏற்படும் என்றும், எனவே, ஏப்.2-ல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.  இந்த மனு இரண்டு தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது, கொம்பன் திரைப்படத்தை ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதிகள் ரவிராஜபாண்டியன், ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் மற்றும் வழக்கறிஞர்கள் பார்வையிட்டு, அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ். ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாக்டர் கிருஷ்ணசாமி ஆஜரானார். அவரது தரப்பு வழக்கறிஞர்கள் பீட்டர் ரமேஷ்குமார், பாஸ்கர் மதுரம் ஆகியோர் வாதிடும்போது, எங்களை 3 நிமிடங்கள் மட்டுமே படத்தை பார்க்கவிட்டனர். அந்த 3 நிமிடத்திலும் ஆட்சேபகரமான வசனங்கள், காட்சிகள் இருந்தன. படத்துக்கு தணிக்கை வாரியம் விடுமுறை நாளில் சான்றிதழ் வழங்கியது தவறு. படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றனர்.
தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விடுதலை, ஓய்வு பெற்ற நீதிபதிகளை படத்தை பார்க்கவிடாமல் மனுதாரர் தரப்பினர் அநாகரீகமாக நடந்து கொண்டனர். இதனால் நீதிபதிகள் படத்தை முழுமையாக பார்க்காமல் வெளியேறிவிட்டனர் என்றார்.

இயக்குநர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி, தணிக்கை வாரியம் படத்தை முழுமையாக பார்த்த பிறகே சான்றிதழ் வழங்கியுள்ளது. மனுதாரர் தரப்பினரோ, நீதிபதிகளோ படத்தை முழுமையாக பார்க்கவில்லை. கதை, கதாபாத்திரங்கள் கற்பனையானது என திரையிட்ட பிறகே படம் தொடங்குகிறது என்றார்.தணிக்கை வாரியத்தின் வழக்கறிஞர் லட்சுமணன் வாதிடும்போது, சட்டத்துக்கு உட்பட்டுதான் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சேபகரமான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன என்றார். இதையடுத்து, கொம்பன் வழக்கில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர். இந்த நிலையில், கொம்பன் படத்துக்கு எதிரான இடைக்கால மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து