முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலையில்லா அரிசி திட்டத்தால் தமிழகத்தில் பசி இல்லை: ஒ.பி.எஸ்

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தால் தமிழகத்தில் பசி பிணி இல்லை என்று முதமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், நிதிநிலை அறிக்கை விவாதத்திற்கு பதிலளித்து ஆற்றிய உரை:-

தலைமை நிதிக் கணக்காயரின் அறிக்கையைக் குறிப்பிட்டு துரைமுருகன் பேசினார். நமது நிதிநிலை அறிக்கையிலும், மானியக் கோரிக்கைகளிலும் அனுமதிக்கப்படும் செலவினங்கள் ஆறு தலைப்பு நிலைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது இவற்றில் முதல் மூன்று தலைப்புகளும் தலைமை நிதிக் கணக்காயரால் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அடுத்த மூன்றும் மாநில அரசால் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

அரசு எந்த ஒரு செலவினத்தை மேற்கொண்டாலும், அச்செலவு எந்தப் பயன்பாட்டிற்காக ஒப்புதல் அளிக்கப்படுகிறதோ அதற்கேற்ப இந்த ஆறு தலைப்புகளின் கீழ் கணக்கு வைக்கப்படும். ஆனால் அனைத்துத் துறைகளிலும் தேவைக்கேற்ப உள், நுணுக்க மற்றும் உள்நுணுக்கத் தலைப்புகளை மாநில அரசு ஏற்படுத்தினாலும், சரியான சிறுதலைப்பு, தலைமை நிதிக் கணக்காயரால் அளிக்கப்படுவதில்லை. ஏனெனில் இவை தேசிய அளவில் உள்ளதாலும், நமது மாநிலத்தில் உள்ள சில செலவினங்கள் மற்ற மாநிலங்களில் இல்லாததாலும், அதற்குரிய சிறு தலைப்புகள் கிடைப்பதில்லை.

இது மட்டுமன்றி, மேற்கூறிய முறையில் சில சமயங்களில் நிதி ஒதுக்கீடு ஒரு திட்டத்திற்கு செய்யப்படும்போது, அந்தத் திட்டத்தில் பல்வேறு வகையான அம்சங்களும், பல்வேறு செலவினங்களும் இருப்பதால், அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் துறை அதன் தேவைக்கேற்ப இவ்வாறு ஒதுக்கப்படும் நிதியை பின்னர் பிரித்துச் செலவழிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இத்தகைய தேவை உள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்போது அந்த நிதியை இதர தலைப்பில் ஒதுக்கீடு செய்தால் மட்டுமே பின்னர் தேவைக்கேற்ப செலவினங்களை பிரித்து உள்ஒதுக்கீடு செய்து பயன்படுத்த முடியும்.

இவ்வாறு ‘இதர செலவினங்கள்’ என ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவழிக்கப்பட்ட சிலவற்றை தலைமை நிதிக் கணக்காயர் சுட்டிக்காட்டியுள்ள குறைபற்றி உரிய விளக்கம் பொதுக் கணக்குக் குழுவில் அளிக்கப்பட உள்ளது. இதை வைத்துக் கொண்டு துரைமுருகன், ஏதோ கணக்கில் ஒரு பெரும் தவறு இழைக்கப்பட்டுள்ளது போலப் பேசினார். இதற்கு இன்னும் விளக்கம் தரவேண்டுமானால், வேளாண் துறையில் ஒரு செலவு 2,127.59 கோடி ரூபாய் ‘800-இதர செலவினம்’ என்பதன் கீழ் கணக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதில் 1952.43 கோடி ரூபாய் விவசாயிகளுக்கான கட்டணமில்லா மின்சாரத்திற்கும், 154.44 கோடி ரூபாய் தேசிய விவசாய வளர்ச்சித் திட்டத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. . தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகளுக்கு கட்டணம் இல்லா மின்சாரம் வழங்கப்படாத காரணத்தால், அதற்கென ஒரு சிறு தலைப்பு இல்லவே இல்லை. அதனை உருவாக்கும் அதிகாரமும் மாநில அரசிற்குக் கிடையாது. எனவேதான் வேறு வழியின்றி ‘800 இதர செலவினம்’ என்ற தலைப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சியிலும் இதே நடைமுறைதான் இருந்தது.ஒரு தலைப்பிலிருந்து வேறொரு தலைப்பிற்கு நிதி ஒதுக்கத்தை மாற்றம் செய்வது, ஒரு பெரிய குற்றம் இல்லை. நாட்டிற்கு வரவேண்டிய பணத்தை வரவிடாமல் உள்நோக்கத்திற்கு தனியார் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுப்பது தவறு. அந்த வகையில் மத்திய தணிக்கை துறை அறிக்கையில் 2ஜி அலைக்கற்று ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாய் நாட்டிற்கு இழப்பீடு ஏற்படுத்திய திமுகவினர் செயல் தான் மாபாதகச் செயல் ஆகும். இதை மத்திய தணிக்கை துறை தனது அறிக்கையில் வெளிப்படுத்தி அதன் காரணமாகத் தான் நீதிமன்றத்திலே வழக்கு நடந்து கொண்டிருக்கின்றது.
 
இதுபோல, தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பது நிதிநிலை அறிக்கை தயாரிக்கும்போது அறிந்திட இயலாது. அதன்பிறகுதான், அத்திட்டத்தில் பல பணிகளுக்கு அனுமதி வழங்கப்படும். இதனை அடுத்து அந்தந்த பணிகளுக்கு ஏற்ப உள்தலைப்பு, நுணுக்கத் தலைப்பு, உள்நுணுக்கத் தலைப்பு ஆகியவற்றை மாநில அரசு வழங்கி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் எந்தப் பணிக்கு எவ்வளவு நிதி செலவிடப்படுகிறது என்பது தெளிவாகவே இருக்கும் என்பதால், கணக்குகள் தெளிவில்லாமல் இருப்பதாகக் கூறுவது சரியல்ல. இதுகுறித்து தலைமை நிதிக் கணக்காயருக்கு விளக்கப்படும். எனவே இதை வைத்து அரசு நிர்வாகத்தை குறைகூறுவது சரியல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொருளாதார வளர்ச்சியைப் பற்றி சிலர் விமர்சனம் செய்துள்ளார்கள். குறிப்பாக தி.மு.க. கூட பொருளாதார வளர்ச்சியைப் பற்றி பேசுகிறது. ஏதோ தி.மு.க. ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருந்தது போலவும் இந்த ஆட்சியில் அது குறைந்துவிட்டது போலவும் ஒரு உண்மைக்கு மாறான தகவலை திமுகவினர் அடிக்கடி கூறிவருகிறார்கள். இந்த ஆட்சியில் 2012-2013 ஆம் ஆண்டில் மட்டும் வறட்சியின் காரணமாக பொருளாதார வளர்ச்சி குறைந்தது. ஆனால் ஜெயலலிதாவின் சிறப்பான நிர்வாக செயல்பாடுகளால், இது உடனடியாக சீர்செய்யப்பட்டு 2013-2014ல் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.29 சதவீதம் ஆகவும், அதுவே 2014-2015ல் 7.25 ஆகவும் உள்ளது.

இது நாட்டின் சராசரி வளர்ச்சியைவிட அதிகம் என்பதையும் அவர்களுக்கு குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன். ஆனால் தி.மு.க. ஆட்சியில் 2007-2008ல் மொத்த வளர்ச்சி 6.13 சதவீதம்தான். அதுவும் 2008-2009 ல் குறைந்து, மொத்த வளர்ச்சி 5.45 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டுகளில் விவசாய துறையின் வளர்ச்சி முறையே (-)4.69, (-) 2.70 சதவீதம், உற்பத்தித் துறையின் (ஆயரேகயஉவரசiபே ளுநஉவடிச) வளர்ச்சி 2007-08 ல் 0.59 சதவீதம், 2008-2009 ல் (-) 1.31 சதவீதம் மட்டுமே.

ஆனால் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சியில் மிகக் குறைந்த வளர்ச்சிபெற்ற 2013ஆம் ஆண்டில்கூட உற்பத்தித் துறை எதிர்மறையான வளர்ச்சியைப் பெறவில்லை. அந்த ஆண்டில்கூட அதன் வளர்ச்சி 1.12 சதவீதமாகதான் இருந்தது. தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2010-2011 ஆம் ஆண்டில் 13.12 சதவீத வளர்ச்சி அடைந்ததாக குறிப்பிடுகிறார்கள். 2005-2006 ஆம் ஆண்டில் அம்மா தலைமையில் ஆட்சி நடைபெற்ற காலத்தில் தமிழ்நாட்டில் மொத்த பொருளாதார வளர்ச்சி 13.96 சதவீதம் ஆக உயர்வடைந்தது. அந்த அடித்தளத்தில்தான் தி.மு.க. ஆட்சி தொடர்ந்து நடைபெற முடிந்தது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

மானியங்களுக்கும் உதவித்தொகைகளுக்கும் 59,185 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதை சிலர் குறை கூறுகின்றனர். இந்த அரசு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருகிறதா? அல்லது இலவசங்களுக்கு முக்கியத்துவம் தருகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். அவர்களுக்கு நான் அளிக்கின்ற பதில், அம்மா அரசு வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் தருகிறது; அவசியமான திட்டங்களுக்கு, குறிப்பாக ஏழை-எளிய மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களுக்கும், மானியம் அவசியம் என்ற காரணத்தினால், அவற்றிற்கும் முக்கியத்துவம் தருகிறது.

இத்தகைய கருத்துகளைச் சொல்பவர்கள் இந்த 59,185 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் வறுமை ஒழிப்பு முதல் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களும் அடங்கியுள்ளதை ஆராய்ந்து அதன்பின் கருத்து சொல்ல வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். ஒரு நாடு பொருளாதார வளர்ச்சி பெறுவதால் மட்டுமே ஏற்றத்தாழ்வுகளை முற்றிலுமாக நீக்கிவிட முடியாது. அவ்வாறு ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்போது அரசுக்கு கிடைக்கின்ற நிதி ஆதாரத்தின் ஒரு பகுதியை பல்வேறு நலத்திட்டங்கள் மூலமாக ஏழைகளுக்கு மானியமாக பகிர்ந்தளித்து, அவர்களின் வாழ்க்கைத் தரமும் தாழ்ந்து விடாமல் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

இதில் என்ன தவறு உள்ளது? மேற்கத்திய பொருளாதாரத்தை அரைகுறையாகக் கற்றவர்கள் வேண்டுமானால், ஏழைகளுக்கு மானியம் தருவதைக் குறையாகக் கூறலாம். ஆனால் ஒருபுறம் சமூகநீதி பற்றி பேசிவிட்டு, மறுபுறம் விலையில்லாமல் ஏழைகளுக்கு அவர்கள் வாழ்க்கைத்தரம் மேம்பட வழங்கப்படும் உதவிகள் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறோம் என்று கூறும் தலைவர்கள் பற்றி நான் என்ன கூறுவது? அத்தகைய மானியம் வழங்கும் திட்டங்களுக்கு அவசியத்திற்கு ஏற்பவே அம்மா அரசு முக்கியத்துவம் வழங்கிவருகிறது. 2015-2016 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மானியங்களுக்கும் உதவித் தொகைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள 59,185 கோடி ரூபாய் எதற்காக செலவிடப்படுகிறது? இதில் எந்தெந்த திட்டங்கள் உள்ளது என்பதைப் பார்க்கவேண்டும்.

உணவு மானியத்திற்காக 5,300 கோடி ரூபாய், விவசாயம், நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் போன்ற மின்சார மானியத்திற்காக 7,136 கோடி ரூபாய், நலிந்த ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக 4,206 கோடி ரூபாய், நலிந்த பிரிவு மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்க 1,924 கோடி ரூபாய், போக்குவரத்து கழகத்திற்கு டீசல் மானியமாக 500 கோடி ரூபாய் இவையெல்லாம் தேவையற்ற செலவினங்களா? இன்று அம்மா தொடங்கிய விலையில்லா அரிசித் திட்டத்தால் தான் தமிழகத்தில் பசிப்பிணி என்பதே இல்லை. சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தால் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை ஏழை எளிய மக்கள் மானிய விலையில் பெறுகின்ற நல்ல சூழ்நிலையை வழங்கியுள்ளார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து