முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புகையிலை பொருட்களில் பெரிய அளவில் எச்சரிக்கை படத்திற்கு உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஏப்ரல் 2015      வர்த்தகம்
Image Unavailable

டெல்லி - நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையைப் புறக்கணித்து விட்டு, பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீது உடல்நலக் கேடு தொடர்பான எச்சரிக்கை விளம்பரங்களை பெரிய அளவில் வெளியிட பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சுகாதார அமைச்சகம் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டுகள் மீது புற்றுநோய் அபாயம் குறித்து எச்சரிக்கையை பெரிய அளவிலான படங்களாக அச்சிடவேண்டும் என்ற முடிவு செய்தது. அதன்படி சிகரெட் பாக்கெட்டுகளில் தற்போது 40 சதவீத அளவுக்கு அச்சிடப்படும் எச்சரிக்கை படம் 85 சதவீத அளவில் பெரிதாக்கப்படவேண்டும். மத்திய சுகாதாரத்துறையின் இந்த முடிவு கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், சிகரெட் பாக்கெட்டுகளில் பெரிய அளவில் எச்சரிக்கை செய்யும் படங்களை அச்சிடவேண்டும் என்ற முடிவை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

 இதற்கிடையே, கடந்த 2003ம் ஆண்டு சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் தொடர்பான சட்டப்பிரிவை ஆய்வு செய்த பாரதிய ஜனதா எம்.பி. திலீப்காந்தி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய சுகாதார அமைச்சருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், இந்தியாவில் நடத்தப்பட்ட எந்த ஆராய்ச்சியும், புகையிலைப் பொருட்களால் புற்றுநோய் வரும் என்பதை உறுதிப்படுத்தவில்லை. வெளிநாடுகளின் 2 ஆய்வுகள்தான் அப்படி கூறுகின்றன.
 
புகையிலையின் காரணமாக மட்டுமே புற்றுநோய் ஏற்படுவதில்லை. எனவே, இது தொடர்பாக விரிவான ஆய்வு தேவை என தெரிவிக்கப் பட்டிருந்தது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் இந்த அறிக்கைக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக புகையிலைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார விளம்பரத்தில் இடம் பெற்றிருந்த சுனிதா தோமர், தனது மரணப் படுக்கையில் வேதனையோடு பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் அவர் புகையிலை விற்பனையை ஒழுங்கு செய்யும் சட்டம் சரிவரப் பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார். இந்தக் கடிதத்தை எழுதிய சில நாட்களிலேயே சுனிதா தோமர் உயிரிழந்தார். சுனிதாவின் இக்கடிதம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது.

இந்நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைக்கு மாறாக, சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களுக்கு எதிரான பட விளம்பரங்களை வெளியிடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு தெரிவித்துள்ளார். அதன்படி, சிகரெட் மற்றும் பிற புகையிலைப்பொருட்கள் மீதான எச்சரிக்கை விளம்பரங்களில் 60, 65 சதவீத விளம்பரங்களை வெளியிட அனுமதிக்குமாறு சுகாதாரத்துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து