முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

வியாழக்கிழமை, 9 ஏப்ரல் 2015      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா - 8வது ஐ.பி.எல். போட்டியின் முதலாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கியது. முதல் போட்டியில் சாம்பியனான காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் காம்பீர், பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஆரோன் பிஞ்ச் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 2வது ஓவரிலேயே ஆரோன் பிஞ்ச் அவுட் ஆனார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி 8 ரன்கள் எடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து ஆதித்ய தாரே, ரோகித் சர்மாவுடன் கை கோர்த்தார். ரோகித் சர்மா விறுவிறுவென ரன்களைக் குவித்த போது தாரே 7 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் வந்த அம்பதி ராயுடு ரன் ஏதும் எடுக்காமலேஎயே அவுட் ஆனார். 10 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 57 ரன்களை எடுத்திருந்தது.ரோகித் சர்மா 36 ரன்களுடனும் கோரி ஆண்டர்சன் 7 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.

இருந்தும் ரோகித் சர்மாவின் ரன்குவிப்பு வேகம் குறையவில்லை. கடைசி ஓவரான 20வது ஓவரின் கடைசி பந்தில் கோரி ஆண்டர் ஒரு சிக்சர் அடித்து 55 ரன்களை எட்டினார். மொத்தம் 41 பந்துகளில் இந்த ரன்னை அவர் எட்டினார். இதில் 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கும். ரோகித் சர்மா 98 ரன்களுடன் 2 ரன்களில் சதத்தை அடிக்க முடியாத நிலையில் இருந்தார். அவர் 65 பந்துகளில் 98 ரன்களைக் குவித்தார். இதில் 12 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடங்கும்.20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து மும்பை இந்தியன்ஸ் அணி 168 ரன்களைக் குவித்தது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெல்ல 169 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் காம்பீர், உத்தப்பா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.  2வது ஓவரை காம்பீர் எதிர்கொண்ட போது வினய் பந்து வீசினார். அவரது பந்தில் காம்பீரின் பேட் இரண்டாக உடைந்து போனது. பின்னர் வேறு பேட் கொண்டுவரப்பட்டு ஆட்டத்தை தொடர்ந்தார் காம்பீர். 2.5வது ஓவரில் உத்தப்பா 9 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அப்போது கொல்கத்தா அணி 13 ரன்களை எடுத்திருந்தது.

அதன் பின்னர் காம்பீருடன் மனிஷ் பாண்டே கை கோர்த்தார். அவர் வந்த வேகத்தில் 4வது பந்தில் ஒரு சிக்சரை பறக்க விட்டு கொல்கத்தாவின் முதல் சிக்சரை பதிவு செய்தார். அடுத்த பந்தில் பவுண்டரி விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அப்போது 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்களை கொல்கத்தா அணி எடுத்திருந்தது.

கொல்கத்தா கேப்டன் காம்பீர் 43 பந்துகளில் 57 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதன் பின்னர் யாதவும் யூசுப்பதானும் ஜோடி சேர்ந்தனர். 18.3வது ஓவரில் வெற்றிக்கான இலக்கை கடந்து 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்களை எட்டி வெற்றி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. மும்பை இந்தியன்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து