முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்: ஐதராபாத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது சென்னை

சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2015      விளையாட்டு
Image Unavailable

சென்னை - 8வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சையில் நடத்தின. டாசில் வென்ற சென்னை பேட்டிங்கை தேர்வு செய்து, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களை குவித்தது. இரண்டாவது பேட் செய்த ஐதராபாத்20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்ததால், சென்னை 45 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று தனது 2வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ். மாலை 4 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற சென்னை அணி கேப்டன் டோணி, தனது அணி முதலில் பேட் செய்யும் என்றார். இதையடுத்து பிரெண்டன் மெக்கல்லம், ட்வைன் ஸ்மித் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கம் முதலே, இரு வீரர்களும், அதிரடியை காண்பித்தனர். முதல் 5 ஓவர்களில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து, ரன் வேகத்தை மேலும் அதிகரித்தனர் சென்னை பேட்ஸ்மென்கள்.

எதிரணி கேப்டன் வார்னர், விக்கெட் வீழ்ச்சிக்காக, புவனேஸ்வர்குமார், இஷாந்த் ஷர்மா, டிரெண்ட் பவுல்ட், சுழற்பந்து வீச்சாளர் கரண் ஷர்மா, ரவி போபாரா என பந்து வீச்சாளர்களை மாற்றி பார்த்தார். ஆனாலும் சென்னை பேட்ஸ்மேன்கள் விளாசலை நிறுத்தவில்லை. இந்நிலையில், 9வது ஓவரின் முதல் பந்தை போபாரா வீச, அந்த பந்தை கட் செய்துவிட்டு சிங்கிளுக்கு ஓடினார், மெக்கல்லம். மறுமுனையில் நின்ற ஸ்மித், கிரீஸ் வருவதற்குள், டிரெண்ட் பவுல்ட் நேரடியாக ஸ்டம்பில் பந்தை எறிந்து, ஸ்மித்தை அவுட் செய்தார். 26 பந்துகளில் எடுத்த 27 ரன்களுடன் ஸ்மித் அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 75ஆக இருந்தது. இதன்பிறகு மெக்கல்லத்துடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார்.

சென்னை அணி 11 ஓவர்களில், ஒரு விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. மெக்கல்லம் 47 ரன்களுடனும், சுரேஷ் ரெய்னா 9 ரன்களுடனும் களத்தில் நின்றனர். இந்நிலையில் ரெய்னா 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லோகேஷ் ராகுலால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதன்பிறகு யாரும் எதிர்பார்காத வகையில் டோணி 4வது வீரராக களமிறங்கினார். வந்த நோக்கத்தை ஈடேற்றும் வகையில், சிக்சரும், பவுண்டரியுமாக விளாசினார். நீண்ட நாட்களுக்கு பிறகு டோணி அதிரடியை பார்த்த சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைத்தனர்.

29 பந்துகளில் டோணி 53 ரன்கள் விளாசிவிட்டு, பவுல்ட் பந்தில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதன்பிறகு இறங்கிய ஜடேஜா டக் அவுட் ஆக, மறுமுனையில், மெக்கல்லம், விளாசலை தொடர்ந்தார். கடைசி ஓவரின் கடைசி 3 பந்துகளை மட்டுமே சந்திக்க மெக்கல்லத்துக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் 89 ரன்களுடன் நின்றிருந்தார். இருப்பினும், சிக்சர், பவுண்டரி, சிங்கிள் என 3 பந்துகளில் 11 ரன் விளாசி, தான் சந்தித்த 56வது பந்தில் சதம் அடித்தார்.  20 ஓவர்கள் முடிவில் சென்னை 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களை குவித்தது. இதையடுத்து, ஐதராபாத்சேஸ் செய்ய தொடங்கியது. தொடக்க வீரர் தவான் அதிரடியாக ஆரம்பித்தாலும், 26 ரன்களில் மோகித் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

லோகேஷ் ராகுல் 5 ரன்கள், ஓஜா 15 ரன்கள், வார்னர் 53 ரன்கள், போபாரா 22 ரன்கள், கரண் ஷர்மா 4 ரன்கள் எடுத்து அவுட் ஆன நிலையில், 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத்6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.நெஹ்ரா, அஸ்வின் உள்ளிட்ட சென்னை பவுலர்களின் சிறப்பான பந்து வீச்சும், மெக்கல்லம், டோணியின் அபார பேட்டிங்கும், சென்னைக்கு தொடர்ந்து 2வது வெற்றியை ஈட்ட உதவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து