முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 6 தமிழர்களின் உடல்கள் மறு பிரேத பரிசோதனை

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், ஏப் 17:
திருப்பதி வனப்பகுதியில் சுட்டு கொல்லப்பட்ட 6 தமிழர்களின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய ஆந்திர ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் இந்த கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்திய சிறப்பு அதிரடிப்படை போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது.


திருப்பதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரின் உடல்களும் திருப்பதி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் 14 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு விட்டன. மீதம் உள்ள முனுசாமி, மூர்த்தி, மகேந்திரன், முருகன், சசிக்குமார், பெருமாள் ஆகிய 6 பேரின் உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டதால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆந்திர மாநில ஐகோர்ட்டில் சசிகுமார் மனைவி முனியம்மாள்  என்பவர் ஒரு மனு செய்திருந்தார்.

அதில் அவர் கொல்லப்பட்டவர்களின் உடல்களில் ஏராளமான காயங்கள் காணப்படுகின்றன. அவர்கள் சித்ரவதை செய்து கொல்லப்பட்டுள்ளனர். எனவே மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். முனியம்மாள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஐதராபாத் ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் நடந்தது. முனியம்மாள் நேரில் ஆஜரானார். இரு தரப்பு வாதங்களை விசாரித்த பிறகு நீதிபதி தீர்ப்பளித்தார். அவர், திருப்பதி வனப்பகுதியில் சுடப்பட்டு இறந்த 20 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையை நாளை(வியாழக்கிழமை) தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

இதையடுத்து அரசு வழக்கறிஞர் கூறுகையில், 20 பேர் கொலை தொடர்பாக ஆந்திர மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது என்றார். உடனே நீதிபதிகள் அந்த சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெறுபவர்களின் பெயர் விவரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து நீதிபதிகள் உத்தரவு ஒன்றை வெளியிட்டனர்.

6 தமிழர்களின் உடல்கள் மீண்டும் மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். மனுதாரர் சில ஆவணங்களை தாக்கல் செய்த பிறகு இது தொடர்பாக முழு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று ஐதராபாத் ஐகோர்ட் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து