முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று நிறைவு

வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் இன்று சனிக்கிழமை (ஏப். 18) நிறைவடைய உள்ளன.

மதிப்பெண் விவரங்கள் அனைத்தும் குறுந்தகடுகளில் பெறப்பட்ட பிறகே தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி குறித்து முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெரும்பாலும் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 2,377 தேர்வு மையங்களில் 8.86 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்று வருகின்றன. கணிதம், வணிகவியல், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டுள்ள நிலையில், உயிரியல் பாட விடைத்தாள்களைத் திருத்தும் பணி இப்போது நடைபெற்று வருகிறது.

சில விடைத்தாள் மையங்களில் மேலும் சில பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் வரும் சனிக்கிழமைக்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பிறகு, இந்த மையங்களிலிருந்து மதிப்பெண் விவரங்கள் திங்கள்கிழமை முதல் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் பெறப்பட உள்ளன. 70 லட்சத்துக்கும் மேற்பட்ட விடைத்தாள்களின் மதிப்பெண் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, பதிவு செய்யப்பட உள்ளன.

இந்த மதிப்பெண் விவரங்களைப் பதிவு செய்யும் பணி, சரிபார்க்கும் பணி ஆகியவற்றுக்கு குறைந்தபட்சம் இரண்டு வார கால அவகாசம் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மூன்று ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் மே முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து