முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத்தை எளிதாக வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்தது ராஜஸ்தான்

வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015      விளையாட்டு
Image Unavailable

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசி வரை போராடி தனது 4-வது வெற்றியை பெற்றது.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விசாகப்பட்டினத்தில் நடந்த 11வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. ஐதராபாத் அணியில் ஒரே ஒரு மாற்றமாக கனே வில்லியம்சனுக்கு பதிலாக மோர்கன் சேர்க்கப்பட்டார். டாஸ் ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் ஐதராபாத்தை பேட் செய்ய அழைத்தார். இதன்படி கேப்டன் டேவிட் வார்னரும், ஷிகர் தவானும் ஹைதராபாத் அணியின் இன்னிங்சை தொடங்கினர்.

 முதல் விக்கெட்டுக்கு 25 ரன்கள் எடுத்த நிலையில், இந்த கூட்டணிக்கு தவால் குல்கர்னி முற்றுப்புள்ளி வைத்தார். அவரது பந்து வீச்சில் தவான் 10 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்த ஓவரில் டேவிட் வார்னர் 21 ரன் ரன்-அவுட் ஆக, ஹைதராபாத்தின் உத்வேகம் சீர்குலைந்தது. அதைத் தொடர்ந்து இறங்கிய லோகேஷ் ராகுலும் 2 ரன்னில் வெளியேறினார். இதன் பிறகு ஐதராபாத் அணியை மீளவிடாமல் ராஜஸ்தான் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.  20 ஓவர்களில் ஐதராபாத் அணியால் 5 விக்கெட்டுக்கு 127 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக மோர்கன் 27 ரன்களும், நமன் ஓஜா 25 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் தரப்பில் தவால் குல்கர்னி, பிரவீன் தாம்பே தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 128 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி சிறப்பான தொடக்கம் கண்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹானேவும், சஞ்சு சாம்சனும் முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் (10.2 ஓவர்) எடுத்தனர். சாம்சன் 26 ரன்களில் அவுட் ஆனார். அப்போது ராஜஸ்தான் அணி மிக எளிதில் வெல்லும் என்ற நம்பிக்கையே ரசிகர்களிடமிருந்தது. அடுத்து வந்த பேட்ஸ்மேன்களான ஸ்டீவன் சுமித் (13 ரன்), கருண் நாயர் (1 ரன்) ஏமாற்றினர். 14வது அரைசதத்தை கடந்த ரஹானே 62 ரன்களில் (56 பந்து, 9 பவுண்டரி) டிரென்ட் பவுல்டின் பந்து வீச்சில் போல்டு ஆக, திடீரென சிக்கல் உருவானது. சிறிய இலக்கு என்றாலும் ஆச்சரியப்படும் வகையில் ஆட்டத்தை கடைசி ஓவர் வரை ஐதராபாத் வீரர்கள் இழுத்துபிடித்து கொண்டு சென்றனர்.

கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன. ஸ்டூவர்ட் பின்னியும், ஜேம்ஸ் பாக்னரும் களத்தில் நின்றனர். 20வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் வீசினார். முதல் பந்தில் பாக்னர் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தில் பின்னியும், ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தை சந்தித்த பாக்னர், அதை மிஸ் செய்ததால், டாட் பந்தாக மாறியது. 4வது பந்தில் பாக்னர் சிங்கிள் எடுத்தார். ஐந்தாவது பந்தை, பின்னி, பிட்சை விட்டு இறங்கி வந்து அடித்த போதிலும், சிங்கிள் ரன்தான் கிடைத்தது. ஆனால் ஆட்டம் அப்போது டிராவானது. கடைசி பந்தில் பால்க்னர் பவுண்டரி அடித்து வெற்றியை தேடித் தந்தார்.

ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. பின்னி 16 ரன்னுடனும், பவுல்க்னெர் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக பெற்ற 4வது வெற்றி இதுவாகும். ஏற்கனவே பஞ்சாப், டெல்லி, மும்பை ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது. அதே சமயம் 3வது லீக்கில் ஆடிய ஹைதராபாத்துக்கு இது 2வது தோல்வியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து