முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக காங்கிரசு பொறுப்பாளர்கள் நியமனம்: செயற்குழு கூட்டத்தில் முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப். 20–

தமிழக காங்கிரசில் நிலவி வந்த கோஷ்டி பூசலுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் ஒரு குழுவாக சென்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை சந்தித்தனர். அப்போது கருத்து வேறுபாடுகளுக்கான காரணங்கள் குறித்து இரு தரப்பினரும் மனம் விட்டு பேசினார்கள். பிரச்சினைகளுக்கு காரணமான நடவடிக்கைகள் பற்றியும் அதிருப்தியை தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் பிரச்சினைகளை மறந்து அனைவரும் கட்சி பணியில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்தனர். முடிவுக்கு வந்த இந்த மோதல் இனிமேலும் முளைத்து விட கூடாது என்று காங்கிரஸ் தொண்டர்கள் நினைக்கிறார்கள்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் எல்லா கட்சிகளும் அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி விட்டன. காங்கிரசும் கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுபற்றி விவாதிப்பதற்காக வருகிற நாளை  (செவ்வாய்) காலை 10 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் செற்குழு கூட்டம் இளங்கோவன் தலைமையில் நடக்கிறது.

இதில் குமரிஅனந்தன், ப.சிதம்பரம், தங்கபாலு உள்பட மூத்த தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டத்தில் கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை பற்றியும், கூடுதலாக உறுப்பினர்களை சேர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்ககைள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர். அவர்களின் பணிகளை மேற்பார்வையிடவும், செயல்பாடுகளை தீவிரப்படுத்தவும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மேற்பார்வை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

மாநில மூத்த நிர்வாகிகள் இந்த பதவியில் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இதுபற்றி நாளை  நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து