முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில கையக அவசர சட்டம் லோக் சபையில் தாக்கல்: எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பம்

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: சர்ச்சைக்குரிய நிலம் கையக மசோதா தொடர்பான அவசர சட்டம் நேற்று பாராளுமன்ற லோக்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அவசர சட்டத்தை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தாக்கல் செய்தார். முன்னதாக, இந்த அவசர சட்டம் லோக்சபையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே எதிர்க்கட்சி தலைவர்கள் சபையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தியதால் சபையில் அமளி ஏற்பட்டது.

அப்போது சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மிகுந்த வேதனையோடு ஒரு கருத்தை சொன்னார். இந்த மசோதா தொடர்பான அவசர சட்டத்தை இன்னும் தாக்கல் செய்யவே இல்லை. அதற்குள் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இது ஏனென்றுதான் எனக்கு புரியவில்லை என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வேதனையோடு குறிப்பிட்டார்.

இந்த அவசர சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக கடந்த 3ம் தேதி நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்துக்கு அனுமதி அளித்து மறு பிரகடனம் செய்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நேற்று தொடங்கியது. அவை அலுவல் பட்டியல்படி, நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி அரசமைப்புச் சட்டத்தின் 123(2)(ஏ)வின் கீழ் ஜனாதிபதி பிறப்பித்த நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்தின் நகலை தாக்கல் செய்தார். நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை பட்ஜெட் கூட்டத்தின் முதல் பகுதியில் நிறைவேற்ற முடியவில்லை. எனவே 2வது முறையாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு அமல் செய்யப்பட்டது. பட்ஜெட் கூட்டத் தொடரின் இந்த 2வது அமர்வில் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு பகீரத முயற்சியில் இறங்கியிருக்கிறது.
அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்கு 80 சதவீத விவசாயிகள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நிலங்களைக் கையகப்படுத்த முடியும். ஐந்து ஆண்டுகளுக்குள் அந்த நிலத்தை பயன்படுத்தாவிட்டால் விவசாயிகளிடமே திருப்பி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட திருத்தங்களுடன் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நிலம் கையக சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

மத்தியில் பாஜக பதவியேற்ற பிறகு இந்தப் பிரிவுகளை நீக்கி கடந்த ஆண்டு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 6 மாதங்களுக்குள் அவசர சட்டங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதன்படி அவசர சட்டத்துக்கு மாற்றாக நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதியில் நிலம் கையகப்படுத்துதல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா பாராளுமன்ற லோக்சபையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. ஆனால் ராஜ்யசபையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை.

அவசர சட்டத்தின் கால அவகாசம் காலாவதியாக இருந்த நிலையில், மீண்டும் அவசர சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை அண்மையில் முடிவு செய்தது.  பொதுவாக அவசர சட்டங்களைப் பிறப்பிக்க நாடாளுமன்றத்தின் ஏதாவது ஓர் அவையை முடித்து கொள்ள வேண்டும். அதன்படி லோக்சபை அண்மையில் முடித்துக் கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம் பிரகடனம் செய்யப்பட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதனை பரிசீலித்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் நேற்று லோக்சபையில் நிலம் கையக அவசர சட்டம் மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடியால் தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபை நேற்று மீண்டும் கூடியுள்ள நிலையில் ராஜ்யசபை வரும் வியாழக்கிழமைதான் கூடவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து