முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5.3 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு சென்னை துறைமுகம் அபார சாதனை

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, சென்னை துறைமுகம் கடந்த 2014-15 நிதியாண்டில் சுமார் 5.3 கோடி டன் சரக்குகளை கையாண்டு அபார சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து சென்னை துறைமுக நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2014-15 நிதியாண்டில் துறைமுகத்தின் அனைத்துத்  துறைகளும் ஒட்டுமொத்தமாக மதிப்பீடு செய்யப்பட்டு அறிக்கை  அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த ஆண்டில் சுமார் 5.3 கோடி டன்  சரக்குகளைக் கையாண்டுள்ளது.

இந்தத் துறைமுகம் முந்தைய 2013-14 நிதியாண்டில் ரூ. 174  கோடி நிகர பற்றாக்குறை இருந்த நிலையில், கடந்த ஆண்டு ரூ. 4 கோடி நிகர  லாபம் ஈட்டியுள்ளது. இரும்பு கசடுகள், சுண்ணாம்புக்கல், எக்கு தகடுகள்,  மரக்கட்டைகள் அதிக அளவில் கையாளப்பட்டுள்ளன. மேலும், துறைமுகத்தில்  செயல்பட்டு வரும் இரண்டு தனியார் முனையங்கள் மூலம் 1.60 மில்லியன் சரக்குப்  பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 6  சதவீதம் அதிகமாகும்.

சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் பெரிய துறைமுகங்களில்  மும்பை நவசேவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு அடுத்தபடியாக  சென்னை துறைமுகம் உள்ளது.

துறைமுகத்தில் தொடர்ந்து அகழ்வு செய்வதன் மூலம் பெரிய  கப்பல்கள் தங்கு தடையின்றி உள்ளே வந்து செல்ல முடியும். பல்வேறு துரித  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் மூலம் கப்பல்கள் துறைமுகத்திற்கு வெளியே  காத்திருக்கும் நேரமும் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கப்பல்  நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் குறைந்துள்ளதும்  குறிப்பிடத்தக்கது.

துறைமுகத்தை மேலும் விரிவுபடுத்தும் திட்டத்திற்கு  புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் நிறைவடையும்போது  ஆண்டுக்கு 10 கோடி டன் சரக்குகளைக் கையாளும் திறன் கொண்டதாக சென்னை துறைமுகம் வலுவடையும்.

சென்னைக்கு அருகில் அமைந்துள்ள துறைமுகங்களுக்கு  சரக்குப் பெட்டகங்களை எடுத்துச் செல்ல வசதியாக கடல்சார் நெடும்பாதை   அமைக்கப்பட உள்ளது. காற்றாலைகள் மூலம் சுமார் 6  மெகாவாட் மின்சாரம் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.  துறைமுகத்தில் காவல், கண்காணிப்பு, தீயணைப்பு உள்ளிட்டவை வெகுவாக  மேம்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து