முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை - தமிழக அரசு

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என கொள்கை முடிவு எடுத்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு மத்திய அரசு சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அரசிடம் பொது மக்கள் கோரும் சேவையை வழங்க 7 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்த காலத்துக்குள் சேவை வழங்கத் தவறினால் அரசு ஊழியர் நாளொன்றுக்கு ரூ. 250 வீதம் அவர் அபராதம் செலுத்தவும் இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. பீகார், ராஜஸ்தான், கர்நாடகம், கேரளம் உள்பட 19 மாநிலங்களில் சேவை பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்துப்பட்டுள்ளது. அதே போன்று தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ. இளங்கோ பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது தமிழக அரசு தலைமைச் செயலர், பணியாளர் நலன், நிர்வாக சீர்திருத்த துறை சார்பில் அதன் துணைச் செயலர் பி.சித்தனார் பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், சேவை பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல், மக்கள் சாசனத்தின்படி, தகவல் தொழில்நுட்ப வள்ர்ச்சி உதவியுடன் பொதுமக்களுக்கான சேவைகள் உரிய நேரத்தில் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 41 லட்சத்து 93 ஆயிரத்து 653 கோரிக்கை மனுக்களுக்கு உரிய நேரத்தில் அந்தந்த துறை சார்பில் சேவை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சேவை பெறும் உரிமைச் சட்டத்துக்கான தேவை இருந்தாலும், அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என தமிழக அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது. அதனால், இந்த வழக்கில் மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. எனவே, இந்த வழக்கை முடித்து வைக்கிறோம் என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து