முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.மா.கா.வின் பொதுக்குழு கூட்டம்: ஜி.கே.வாசன் தலைவராக தேர்வு

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை: தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஜி.கே.வாசன் முறைப்படி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து வாசன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் பிரிந்து வந்து மீண்டும் தமாகாவை தொடங்கினார்கள்.

இதன் அறிமுக கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் திருச்சியில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தமாகாவுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி கடந்த 5 மாதங்களாக நடைபெற்றது.  சுமார் 43 லட்சம் உறுப்பினர்கள் மார்ச் மாதம் வரை சேர்ந்திருந்தனர். இக்கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி  திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் தேர்தல் முறைப்படியாக நடைபெற்றது. தமாகாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருமான ஞானதேசிகன், முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் ஆகியோர் தேர்தல் அதிகாரியாக இருந்து இந்த தேர்தலை நடத்தினர்.

தேர்தல் அதிகாரி ஞானதேசிகன் பேசும் போது ஜி.கே.வாசன் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை வழங்கி இருப்பதாகவும், வேறு யாரும் தலைவர் பதவியில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அவர்கள் மனு செய்யலாம் என்று அறிவித்தார். அப்போது மண்டபத்தில் திரண்டிருந்த நிர்வாகிகளும், ஆயிரக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்களும்  எங்கள் ஒரே தலைவர் ஜி.கே.வாசன் தான் என்று குரலெழுப்பினார்கள்.

இதையடுத்து  முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்புக்கு ஜி.கே.வாசனை முன்மொழிவதாக கூறினார்.  அதை  தமாகா மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வழிமொழிந்தார். இதை தொடர்ந்து என்.எஸ்.சி. சித்தன், கார்வேந்தன், ராமசுப்பு, கோவை தங்கம்,முக்தா சீனிவாசன், லட்சுமி ஆல்பர்ட், அசன் அலி, ராணி, கோவை மகேஸ்வரி, சாருபாலா தொண்டைமான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் ஜி.கே.வாசனை தலைவராக முன்மொழிந்து வழிமொழிந்து பேசினர். இதையடுத்து ஜி.கே.வாசன் தமாகா தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக  தேர்தல் அதிகாரி பி.எஸ்.ஞானதேசிகன் அறிவித்தார்.  இதையடுத்து  முன்னணி தலைவர்கள் பலரும் ஜி.கே.வாசனை வாழ்த்தி பேசினார்கள்.
கட்சியின் மூத்த தலைவர்கள் ஜி.கே.வாசனுக்கு  ஆளுயர மாலை அணிவித்து  தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். பொதுக்குழு உறுப்பினர்களும் வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.  தமாகா பொதுக்குழுவை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் இருந்து வானகரம் வரையிலும்  வழிநெடுக கொடிகள், தோரணங்கள்,   கட்அவுட்டுகள்,    பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. பொதுக் குழுவுக்கு சுமார் 1500 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.ஆயிரம் பேர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தவிர 3000 மேற்பட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து பொதுக்குழு கூட்டத்தை கண்டு களித்தனர்.  இவர்களுக்கு வசதியாக மண்டபத்தின் வெளிப்புறத்தில் பந்தல் அமைக்கப்பட்டு தொலைக்காட்சிகள் அமைத்து  பொதுக்குழு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

இந்த பொதுக்குழு கூட்டத்தில்  மூப்பனாரின் சகோதரர் ஜி.ஆர். மூப்பனார், திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ஆர்.ரங்கராஜ், ஜான்ஜேக்கப், மூப்பனாரின் நண்பர் முக்தா சீனிவாசன் மற்றும்  முன்னாள் எம்எல்ஏக்கள் தொட்டியம் ராஜசேகர், டாக்டர் ராமன், ராம்பாபு, அசன் அலி,குமாரதாஸ், மதுரை ராஜேந்திரன், கோவை மகேஸ்வரி மற்றும் முனவர் பாட்ஷா, இல.பாஸ்கரன், கோவிந்தசாமி, யுவராஜ், நெடுஞ்செழியன், கொட்டியம் ஏ.முருகன், பிஜு சாக்கோ, கத்திபாரா ஜனார்த்தனம், சைதை மனோகரன் உள்பட ஏராளமானோர்  பொதுக்குழுவில் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து