முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா அறிவித்த மோனோ ரெயில் திட்டம்: 2 ஆண்டுகளில் பணி முடிவடையும்

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: சென்னையில் மோனோ ரெயில் திட்டத்தை நிறைவேற்ற தேர்வு செய்யப்பட்ட “டிரான்ஸ்போர்டேஷன் நெட் ஓர்க்” லிமிடெட் மற்றும் மும்பையை சேர்ந்த எஸ்.எல். இன்ப்ரா புராஜெக்ட் என்ற  நிறுவனம் ஆகியவற்றில் குறைந்த தொகை குறிப்பிடும் நிறுவனத்துக்கு மே மாதம் பணி ஆணை வழங்கப்பட உள்ளது.

சென்னை மாநகரில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் மோனோ ரெயில் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முன்வந்துள்ளது. மோனோ ரெயில் திட்டம், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் கனவுத்திட்டமாகும். இது 2011-ம் ஆண்டு சட்டசபையில் கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது.

தற்போதுள்ள சாலைகளின் மேலேயே மோனோ ரெயிலுக்கான பாதை அமைக்கப்பட உள்ளது. அதற்கான பாதை அமைப்பதும் எளிதாக இருக்கும் என்பதால். 3 கட்டங்களாக இந்தத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. திட்டத்தில் சில மாறுதலும் கொண்டு வரப்பட்டுள்ளது.

முதல் கட்டம், வண்டலூர்- –வேளச்சேரி (23 கி.மீ.), இரண்டாம் கட்டம் பூந்தமல்லி -–கத்திப்பாரா சந்திப்பு (16 கி.மீ.) நீளம். மூன்றாம் கட்ட பூந்தமல்லி –- வடபழனி (18 கி.மீ.), மொத்தம் 57 கி.மீ. நீளத்துக்கு மோனோ ரெயில் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வண்டலூர்-– வேளச்சேரி இடையே செல்லும் மோனோ ரெயில் பாதை, வண்டலூர் டெப்போவில் தொடங்கி, மிருககாட்சி சாலை, பெருங்களத்தூர், கிழக்குத் தாம்பரம், கேம்ப் சாலை, மேடவாக்கம் வழியாகச் சென்று வேளச்சேரியை அடைகிறது. இந்தப்பாதையில் 14 மோனோ ரெயில் நிலையங்கள் அமைகின்றன.

பூந்தமல்லி -– கத்திப்பாரா இடையே செல்லும் மோனோ ரெயில் பாதை, பூந்தமல்லி டெப்போவில் தொடங்கி பூந்தமல்லி, குமணன்சாவடி, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, போரூர், ராமாபுரம், கத்திப்பாராவை அடைகிறது. இந்த பாதையில் 13 மோனோ ரெயில் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

பூந்தமல்லி –- வடபழனி இடையே செல்லும் மோனோ ரெயில் பாதை, பூந்தமல்லி டெப்போவில் தொடங்கி, பூந்தமல்லி, குமணன்சாவடி, மதுரவாயல், வளசரவாக்கம் வழியாக வடபழனியை அடைகிறது. இந்த பாதையில் 11 மோனோ ரெயில்வே ஸ்டேஷன்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தை சர்வதேச தரம் வாய்ந்த நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்காக உலகளாவிய டெண்டர் விடப்பட்டது. அதில் 8 நிறுவனங்கள் விண்ணப்பித்தன. இவற்றில் 5 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. இவர்களில் மும்பையை சேர்ந்த ‘எஸ்.எல் இன்ப்ரா புராஜக்ட்’ நிறுவனம் மலேசியாவைச் சேர்ந்த ஸ்கோமி என்ற நிறுவனத்தின் தொழில் நுட்பத்துடன் செயல்படுத்த முன்வந்துள்ளது.

அதேபோல் ஒரு சில வங்கிகள் இணைந்து ஐ.எல்.எஸ்.எஸ் என்ற அமைப்பு ஏற்படுத்தி “டிரான்ஸ்போர்ட் நெட் ஓர்க் லிமிடெட்” சார்பில் தமிழகத்தில் பல்வேறு சாலைகளை அமைத்துள்ளது. இவர்கள் சீனா நாட்டில் உள்ள நிறுவனத்தின் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மோனோ ரெயில் பாதையை செயல்படுத்தவும் முன்வந்துள்ளன. தற்போதைய நிலையில் தேர்வு செய்யப்பட்ட இந்த 2 நிறுவனங்களில் குறைவான தொகையை குறிப்பிடும் நிறுவனத்தை தமிழக அரசின் கீழ் செயல்படும் மோனோ ரெயில் அமைப்பை நிர்வகிக்கும் குழு தேர்வு செய்ய உள்ளது.

இந்த நிறுவனங்கள் மே மாதம் தங்கள் தொகையை  தெரிவிக்க உள்ளனர். அதற்கு பிறகு மோனோ ரெயில் திட்டத்தை நிறைவேற்றும் பணி மே மாதமே ஒப்படைக்கப்பட உள்ளது. அதற்கான முறையான பணி ஆணை வழங்கப்பட உள்ளது. அதற்கு முன்பாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் திட்ட வரைபடத்துக்கு சான்றிதழ் அளித்த பின்னரே பணியை முறையாக தொடங்க முடியும் என்பதால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரெயில் திட்டத்தில் இருந்து மோனோ ரெயில் முற்றிலும் வேறுபட்டதாகும். கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளிலும் மோனோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த முடியும். நில ஆர்ஜிதம் போன்ற அதிக செலவுள்ள நடவடிக்கைகள் மோனோ ரெயில் திட்டத்துக்கு தேவையில்லை. மோனோ ரெயில் பாதை அமைப்பது, அதை பராமரிப்பது போன்றவை மிகவும் எளிது. மேலும், எடையில் மெட்ரோ ரெயிலைவிட மோனோ ரெயில் மிகக் குறைவானது.

எனவே மோனோ ரெயிலை இயக்க அதிக சக்தியும் தேவைப்படாது. அதுமட்டுமல்ல. இந்த ஆண்டு இறுதிக்குள் மோனோ ரெயில் திட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குள் ஒட்டு மொத்த பணியையும் நிறைவு செய்ய வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் சென்னையில் மோனோ ரெயில் ஓடத் தொடங்கிவிடும் என்று மோனோ ரெயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து