முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மற்றும் புறநகரில் இடி, மின்னலுடன் திடீர் மழை - சிங்கபெருமாள்கோவிலில் ஆலங்கட்டி மழை

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை மற்றும் புறநகரில் நேற்று முன்தினம் இரவு         திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சிங்கபெருமாள்கோவிலில் ஆலங்கட்டி மழை பெய்தது. தமிழகம் முழுவதும் பரவலான இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஆனால் சென்னையில் மட்டும் மழை பெய்யாமல், கடுமையான வெயில் வாட்டி வதைத்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு  மாலை 6 மணிக்கு மேல் வானம் இருட்டத் தொடங்கியது.இரவு 7.30 மணி அளவில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சென்னை நகரம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, அண்ணாநகர் உள்பட நகரின் பல பகுதிகளிலும் மழை பெய்தது.

இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியது.மாலை நேரம் என்பதால் அலுவலகங்களில் வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள் இந்த மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சாலைகளில் மழைநீர் ஓடியதால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சென்னை புறநகர் பகுதிகளிலும் திடீரென மழை பெய்தது. தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம், சேலையூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில்  இரவு 7 மணி முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இடியும், மின்னலும் பலமாக இருந்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. பல்லாவரம் மணிமேகலை தெருவில் உள்ள ஒரு வீட்டில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து கருகியது. குன்றத்தூர், மாங்காடு, பூந்தமல்லி, போரூர், திருவேற்காடு, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

இதேபோல் ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதியில் லேசான மழையும், ஆவடி, பட்டாபிராம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலான மழையும் பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னையில் பல இடங்களில் நீண்ட நேரம் தூறல் நீடித்தது. அதிக மின்னலையும் காணமுடிந்தது.

தாம்பரத்தை அடுத்த சிங்கபெருமாள்கோவில் ஊராட்சி பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரம் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் ஐஸ்கட்டிகளை கையில் எடுத்து விளையாடினார்கள். பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் முறிந்தன. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் மரக்கிளைகள் ஆங்காங்கே விழுந்ததால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

கொளத்தூர் அஞ்சுகம் நகரில் இடிதாக்கி 8-க்கு மேற்பட்டோர் வீடுகளில் டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன. மாதவரம் புதிய மேம்பாலம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மண்ணூர்பேட்டை, கள்ளிக்குப்பம், திருமங்கலம், முகப்பேர், கொரட்டூர், ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திருவொற்றியூர், எண்ணூர், மணலி ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. திருவள்ளூரில்ரெயில்கள் பாதிப்பு.

இதேபோல் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருவள்ளூர், கடம்பத்தூர் ரெயில் நிலையங்களில் சிக்னல் கோளாறு ஏற்பட்டு அரக்கோணம், திருத்தணி செல்லும் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. கருடாத்ரி, ஐதராபாத், பெங்களூர் மெயில் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நிறுத்தப்பட்டன.
கோளாறு சரிசெய்யப்பட்டு 30 நிமிடங்களுக்கு பின்னர் அவை புறப்பட்டு சென்றன. ஊத்துக்கோட்டையிலும் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. திடீர் மழையால் குளிர்ந்த காற்று வீசியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து