முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மகளிர் கால்பந்து வீராங்கனைகள் விரைவில் மீட்கப்படுவார்கள் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள் விரைவில் மீட்கப் படுவார்கள் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். நேபாள நாட்டில் நடைபெற்று வரும் 14 வயதுக்கு குறைவான மகளிர் கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக 18 பேர் கொண்ட இந்திய அணி அங்கு சென்றிருந்தது.

அரையிறுதிப் போட்டியில் நேபாள அணியுடன் தோற்ற இந்திய அணி, மூன்றாவது இடத்தைப் பிடிப்பதற்காக ஈரானுடன் மோத இருந்தது. இதற்காக வீராங்கனைகள் அனைவரும் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.  நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அந்நாட்டில் சுமார் 1800க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து அங்கு நில அதிர்வு உணரப் பட்டு வருகிறது.

மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், நிலநடுக்கத்தால் இந்திய அணி மாணவிகள் அனைவரும் மிரண்டுப் போனதாக கால்பந்து அணியின் பயிற்சியாளர் மாய்மால் ராக்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், மூன்றாவது இடத்தை பிடிப்பதற்கான போட்டி தொடங்குவதற்கு முன் நாங்கள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தோம். அப்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் போட்டியை கண்டுகளிப்பதற்காக மைதானத்திற்கு வந்திருந்தனர்.

இந்த நிலையில் தான் பூமி அதிரத் தொடங்கியது. நாங்கள் அனைவரும் மைதானத்தின் மையப்பகுதிக்கு சென்றோம். மைதானத்திற்கு அருகில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் அனைவரும் மிரண்டு போனோம் என்றார்.  நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்திய மற்றும் ஈரான் அணியை சேர்ந்த வீராங்கனைகள் அனைவரும் ஓட்டலுக்கு திரும்பினர். எனினும் தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு வந்ததால் பயந்து போன அவர்கள் தங்கள் அறைக்குள் செல்லாமல், ஓட்டலுக்கு வெளியிலேயே தங்கள் இரவை கழித்தனர்.

மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டல் நிர்வாகத்தினர் மிகுந்த அன்புடன் தங்களுக்கு உணவையும், தூங்குவதற்கான பொருட்களையும் வழங்கியதாக ராக்கி தெரிவித்துள்ளார். சிறுமிகள் அனைவரும் மிகுந்த பயத்துடன் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் பரிதவித்து வருவதாக கூறியுள்ள ராக்கி, அணியின் மேலாளர் சப்னா இந்திய தூதரகத்திற்கு தொடர்பு கொண்டு பேசியதற்கு தங்களை விமான நிலையத்துக்கு வருமாறு தூதரக அதிகாரிகள் கேட்டுகொண்டதாகவும் கூறினார்.

பின்னர் தங்கள் அனைவரையும் இந்திய விமானப்படை விமானம் மூலம் தாய்நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக தூதரக அதிகாரிகள் உறுதியளித்தாகவும் ராக்கி தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் கால்பந்து அணியை சேர்ந்த சிறுமிகள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக மீட்கப்படுவார்கள் என வெளியுறவுத் துறை சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து