முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: பஞ்சாப் அணி வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பிடித்தது சென்னை

ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015      விளையாட்டு
Image Unavailable

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 24வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது சென்னை சுப்பர் கிங்ஸ்.இதன் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது சென்னை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து 192 ரன்கள் குவித்தது. இரண்டாவதாக களமிறங்கிய பஞ்சாப் அணி, சென்னையின் அபார பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே சென்னை அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோணி தனது அணி முதலில் பேட் செய்யும் என்றார். இதையடுத்து ட்வைன் ஸ்மித் மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ட்வைன் ஸ்மித் 26 ரன்களில் அனுரீத் சிங் பந்து வீச்சில் பவுல்ட் ஆனார். அதேநேரம், பிரெண்டன் மெக்கல்லம் 44 பந்துகளில் அதிரடியாக 66 ரன்களை குவித்தார்.

இதன்பிறகு 29 ரன்கள் எடுத்திருந்த சுரேஷ் ரெய்னா, எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. கேப்டன் டோணி, 21 பந்துகளில் 41 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 11 பந்துகளில் 18 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.

193 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் பேட்டிங்கை தொடங்கியது. ஆனால், முதல் ஓவரின் 5வது பந்திலேயே பஞ்சாப்புக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அதிரடி வீரர் வீரேந்திர சேவக் 1 ரன்னில், ஈஸ்வர் பாண்டே பந்தில் டுப்ளசிஸ் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 4. இதைத்தொடர்ந்து ஷான் மார்ஷ் 10 ரன்களில் நெஹ்ரா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 5.1 ஓவர்களில் 35 ரன்களாக இருந்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாப் கேப்டன், ஜார்ஜ் பெய்லி, ரவீந்திர ஜடேஜாவின் அபார பந்தில், டோணியிடம் கேட்ச் கொடுத்து ஒரே ரன்னில் வெளியேறினார். மற்றொரு அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லரையும் ஜடேஜா மூன்றே ரன்களில் வெளியேற்றினார்.விருதிமான்சாஹா, 15 ரன்கள், அக்சர் பட்டேல் 9 ரன்கள் எடுத்து முறையே, நெஹ்ரா மற்றும் அஸ்வின் பந்துகளில் ஆட்டமிழந்தனர். மிட்சேல் ஜான்சனை 1 ரன்னில், ஜடேஜா வீழ்த்தினார்.

பஞ்சாப் அணியை பொறுத்தளவில் தொடக்க வீரர் முரளி விஜய் மட்டுமே கலக்கலாக ஆடினார். அவர் 32 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அஸ்வின் பந்தில் ட்வைன் பிராவோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பஞ்சாப்புக்காக ஆடினாலும், விஜய் சென்னையை சேர்ந்தவர் என்பதால் அவரது ஷாட்டுகளுக்கு சென்னை ரசிகர்கள் கரகோசம் எழுப்பி வாழ்த்து தெரிவித்து ஆதரவு கொடுத்ததை பார்க்க முடிந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 95 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே சென்னை அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை அணி, பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலுமே, பஞ்சாப்பை முற்றிலுமாக பந்தாடிவிட்டது. இந்த வெற்றியின் மூலம், ராஜஸ்தானை பின்னுக்கு தள்ளி, சென்னை புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. போட்டி தொடங்கும் முன்பாக, நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு, இரு அணி வீரர்களும் மவுன அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து