முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை, மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது. திருக்கல்யாண கட்டண சீட்டு நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோவில், அழகர் கோவில் ஆகிய கோவில்களில் நடைபெறும் விழாக்களில் பிரசித்தி பெற்ற விழா சித்திரை திருவிழாவாகும். இவ்விழாவை காண தமிழக பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவரும் வருவது உண்டு. கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்து வருகின்றனர்.

மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் 6வது நாள் விழா சைவ சமையஸ்தாபித வரலாற்று லீலை நடந்தது. 7வது நாளான நேற்று தங்க சப்பரங்களில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் உலா வந்து நாயக்கர் மண்டகப்படிக்கு 12 மணிக்கு எழுந்தருளினர். இரவு 7 மணிக்கு 4 மாசி வீதிகளில் நந்திகேசுவரர் யாளியில் சுவாமி அம்மன் உலா நடக்கிறது.

சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது. இன்று காலை தங்கப் பல்லக்கில் சுவாமி, அம்மன் புறப்பாடாகி கீழ் சித்திரை வீதி, தெற்காவனி மூல வீதி வழியாக மேலமாசி வீதியில் உள்ள திருஞானசம்பந்தர் சுவாமிகள் ஆதீனம் கூட்டுசெட்டி மண்டகப்படியில் எழுந்தருள்கின்றனர். மாலையில் அங்கிருந்து புறப்பட்டு திருக்கோவிலில் சுவாமி சன்னதியை அடைகின்றனர்.  பின்னர் அம்மன் சன்னதியில் இரவு 6.36 மணி முதல் 8 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். இதை தொடர்ந்து தங்க, வெள்ளி சிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கிறார்கள்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வருகிற 30ம் தேதி நடக்கிறது. இத்திருக்கல்யாணத்தை காண தரிசன கட்டணமாக ரூ. 500, ரூ. 200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டண சீட்டை பெற வெளிநாட்டினர் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு செய்த ஆவணம் மற்றும் செல்போன் மூலம் கிடைத்த குறுந்தகவலை காட்டி கட்டண சீட்டை நேரில் பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. அம்மன் சன்னதி முன்புள்ள டிக்கெட் விநியோக இடம் மற்றும் புதிய விநியோக பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் கட்டண சீட்டு பெறுவதற்கான தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த தேதியில் வந்து பெற்று கொள்ளலாம். வெளிநாடு, வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வருகிற புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மேல சித்திரை வீதியில் உள்ள பிர்லா மந்தீரில் கட்டண சீட்டை பெற்று கொள்ளலாம் என கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து