முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெரியாறு, வைகை அணை நீர்மட்டம் உயர்வு

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      தமிழகம்

வருசநாடு - தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தொடர் மழையால் பெரியாறு, வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த வாரம் முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. தென்மாவட்டங்களை பொறுத்தவரை தேனியில் சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நள்ளிரவு 12.30மணிக்கு மேல் சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது.

சிவகங்கை மாவட்டத்தில் சாரல் மழை பெய்தது. காரைக்குடி பகுதியில் நேற்று காலை 6.30 மணி முதல் 9 மணி வரை சுமார் 2.30 மணி நேரம் மழை நீடித்தது. இதனால் நகரின் பல பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மதுரை நகர் பகுதியில் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. புறநகர் பகுதிகளில் காலை 9 மணியளவில் தொடங்கி சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

தேனி மாவட்டம், கடமலை - மயிலை ஒன்றியத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணையின் முக்கிய நீராதாரமாக விளங்கும் மூலவைகையாற்று பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மூலவைகையாற்றை நம்பி உள்ள தும்முக்குண்டு, முருக்கோடை, வருசநாடு, சிங்கராஜபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோடையில் இம்முறை குடிநீர் பஞ்சத்துக்கு வாய்ப்பே இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர்மழையால் பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.90 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து 538 கன அடி. வைகை அணையின் நீர்மட்டம் 40 அடியை எட்டியுள்ளது. 682 கன அடிதண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கோடைக்காலத்தில் நீண்ட காலத்துக்கு பிறகு அதிகளவு தண்ணீர் வரத்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து