முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிர் கடனுக்கு 7 சதவீத வட்டி சலுகை: நிரந்தரமாக்க சரத்குமார் கோரிக்கை

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

சென்னை: விவசாய பயிர் கடன் 7 சதவீத வட்டி சலுகையை நிரந்தரமாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-       

ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த இடத்தில் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியான செய்தி என்பதைத் தாண்டி நம் தேசத்திற்கு ஏற்பட்டிருக்கும் அவமானம் - தலைகுனிவு என்பதே 120 கோடி மக்களும் வேதனையோடு மனதில் பதிக்க வேண்டிய விஷயம். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதத்திற்கும் மேல் பங்களிப்பை தருவது விவசாயம் என்று நாம் பெருமையோடு கொள்ளும் மகிழ்ச்சி, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று வரும்போது அந்த மகிழ்ச்சியை தற்காலிகமான மகிழ்ச்சியாகத்தான் கருத முடியும்.        

விவசாயியை, சாகுபடி செய்து சாதனை படைப்பவனாக மாற்ற வேண்டிய அரசு, அவன் சாகும்படி செய்வதுதானா சாதனை? வங்கிகளில் பல லட்சம் கோடி ரூபாய் வராக் கடனாக மாற்றிய பெருமைக்குரிய தொழில் அதிபர்கள் தங்கள் வசதி வாய்ப்புகளை இம்மியளவும் குறைத்துக்கொள்ளவில்லை. ஆனால், சில ஆயிரம் கடன்பட்ட விவசாயிகளை மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்ய வைப்பதா பொருளாதார முன்னேற்றம்?.       

இத்தகைய நிலையில் ரிசர்வ் வங்கி, 2015-2016 சிறப்பு விவசாய கடன் சலுகை அளித்ததில் விவசாயிகளுக்கு பயிர் கடன் 7 சதவீதம் வட்டியில் வழங்க வேண்டும் என்றும், குறித்த காலக்கெடுவில் கட்டி முடிந்தால் அதில் 3 சதவீதம் சலுகை வழங்கி 4 சதவீதம் வட்டி மட்டும் வசூலிக்கலாம் என்றும் வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது. இச்சலுகையை 2015-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதியோடு முடித்துக்கொள்ளுமாறு அறிவித்துள்ளது. பின்னர் இதே சலுகையை ஜூன் இறுதி வரை நீட்டித்துள்ளது. இப்படி அவ்வப்போது நீட்டிக்காமல், விவசாய பயிர்க்கடனுக்கு 7 சதவீதம் வட்டியை உறுதி செய்து அதை ஒழுங்காக கட்டும் விவசாயிகளுக்கு 3 சதவீதம் சலுகையை வழங்கி 4 சதவீதம் வட்டியை உறுதி செய்ய வேண்டும். ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள இந்த சலுகையை விவசாயிகளுக்கு நிரந்தரமாக கிடைக்கச் செய்ய வேண்டும்.       

பருவ மழைக் குறைபாடுகள், வறட்சியும், வெள்ளமும் மாறிமாறி ஏற்படுத்தும் பாதிப்பு, விவசாயத்தில் நிலையற்ற தன்மை, லாபம் என்பது கேள்விக் குறியான நிலை என விவசாயத் தொழிலில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டிய அரசு, விவசாயத்தை மேலும் பலவீனப்படுத்தும் விதமாக விவசாயக் கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.       

மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பாரத ரிசர்வ் வங்கி தற்போது அதிகரிக்க இருக்கும் வட்டி விகித உயர்வை திரும்பப்பெற செய்வதோடு மேலும் குறைக்கச் செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் நலனில் தங்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்று மத்திய அரசை சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.       

இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து