முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாறன் சகோதரர்களின் ரூ. 742 கோடி சொத்துக்கள் முடக்கம்: உத்தரவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

சென்னை: மாறன் சகோதரர்களின் ரூ. 742 கோடி சொதுக்களை முடக்கி மத்திய அமலாக்கத் துறை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலதிபரான சிவசங்கரன், இந்தியாவில் தனக்குச் சொந்தமான ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனப் பங்குகளை 2006-இல் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க, அப்போது மத்தியில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக சிபிஐயிடம் 2011-இல் புகார் அளித்தார்.

அதில், தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத் தலைவர் அனந்த கிருஷ்ணன், அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரால்ஃப் மார்ஷல் மற்றும் சன் டைரக்ட், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், சௌத் ஏசியா என்டர்டெயின்ட்மென்ட்ஸ் ஹோல்டிங்ஸ் (மொரீஷியஸ்), அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் (பிரிட்டன்) ஆகிய நான்கு நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றம் சாட்டியது.

இந்த விவகாரத்தில் கோடிக் கணக்கில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதால், அது தொடர்பான சட்டப் பிரிவின் கீழ், அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.  இதன் தொடர்ச்சியாக மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களின் சொத்துகளில் ரூ.742.54 கோடி அளவுக்கான சொத்துகளை முடக்கி கடந்த மார்ச் 31-ஆம் தேதி மத்திய அமலாக்கத் துறை உத்தரவிட்டது.

இந்த நிலையில், மத்திய அமலாக்கத் துறை பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சன் டிவி நெட்வொர்க், கல் கம்யூனிகேசன் லிமிடட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அதிகாரிகள் எம்.ஜேதிபாசு, விட்டல் சம்பத்குமரன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ம்னுதாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மத்திய அமலாக்கத் துறை தரப்பில் வழக்குரைஞர் தண்டாபனி ஆஜராகி, 2ஜி அலக்கற்றை முறைகேடு தொடர்பாக விசாரணை செய்து வரும் சிபிஐ, அமலாக்கத் துறையின் விசாரணையை தாமதப்படுத்தும் விதத்தில் எந்த ஒரு நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மனுதாரர்கள் தரப்பில் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் கபில் சிபல், மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் இருவரும் ஆஜராகி, இந்த வழக்குக்கும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எந்த தொடர்பும் இல்லை. மேலும், முடக்கப்பட்டச் சொத்துக்கள் தொடர்பாக எந்த வில்லங்கமும் செய்ய மாட்டோம் என உறுதி அளித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமலாக்கத் துறையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, ஏப்ரல் 29-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து