முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் சித்திரை திருவிழா களை கட்டியது: இன்று திக் விஜயம்

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை: மதுரையில் சித்திரை திருவிழா களை கட்டியது. பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-வது நாளான நேற்று காலை மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் ஆகியோர் தங்கப்பல்லக்குளில் எழுந்தருளினர். பின்னர் கீழசித்திரை வீதி, தெற்கு ஆவணி மூல வீதி, நேதாஜி சாலை வழியாக மேலமாசிவீதியில் உள்ள கட்டுச்செட்டி மண்டகப் படியை வந்தடைந்தனர். மாலை அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் கோவிலை சென்றடைந்தனர்.

நேற்று இரவு 7.30 மணியளவில் விருச்சிக லக்கனத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கோவிலின் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் அம்மனுக்கு ரத்தின ஆபரணங்கள் இழைத்த ராயர் கிரீடம் சாத்தி, ரத்தின கற்கள் பதிக்கப்பட்ட செங்கோல் வழங்கி அபிஷேக ஆராதனைகளுடன் பட்டாபிஷேகன் நடந்தது. வைர கிரீடம், வைர அணி கலன்கள் சாத்தப்பட்டு காட்சி அளித்த மீனாட்சி அம்மனிடம் இருந்து செங்கோலை, கோவில் தக்கார் பெற்றுக் கொண்டு சுவாமி சன்னதி 2ம் பிரகாரத்தில் வலம் வந்தார். அதன் பின்னர் மீண்டும் மீனாட்சி அம்மனிடமே, செங்கோல் ஒப்படைக்கப்பட்டது.

சித்திரை முதல் ஆவணி வரை 4 மாதங்கள் மதுரையை மீனாட்சி ஆட்சி புரிவதாக ஐதீகம், அதையொட்டி இந்த பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது. பட்டாபிஷேகம் முடிந்த பிறகு தங்க சிம்மாசனத்தி்ல சுவாமியும், வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனும் மாசி வீதிகளில் வலம் வந்து அருள் பாலித்தார். 9ம் தேதியான இன்று இரவு 7 மணிக்கு வடக்கு மாசிவீதி, கீழமாசிவீதி சந்திப்பில் உள்ள லாலா ரெங்கசத்திரம் மண்டபத்தில் மீனாட்சி அம்மன் திக்கு விஜயமும், சீர்வரிசை உலாவும் நடைபெற்றது.

மீனாட்சி அம்மன் தடாதகை பிராட்டியாக மதுரையில் அவதரித்து ஆட்சி புரிகையில் மேற்கண்ட திக்கு விஜய புராண வரலாற்று நிகழ்வினைக் குறிக்கும் வகையில், அம்மனின் திக்கு விஜயம் நடைபெறுகிறது.  அப்போது அம்மன், திக்குபாலர்களை எதிர்த்து வெற்றி பெற்ற லீலை நடத்தப்படுகிறது. இதற்காக சுவாமி - அம்மன் ஆகியோர் மரவர்ண சப்பரவாகனத்திலும், இந்திர விமான வாகனத்திலும் பவனி வருகிறார்கள். 10ம் நாளான நாளை காலை 9 மணிக்கு மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது.
அதை பார்க்க மாலை மற்றும் இரவு நேரங்களில் பெண்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருக்கல்யாணம், அழகர் எதிர்சேவை, வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் என்று வரிசையாக திருவிழாக்கள் வருவதால் மதுரையில் சித்திரை திருவிழா களை கட்டத்தொடங்கி விட்டது.

திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக திருச்சி, கோவை மற்றும் தென் மண்டல பகுதிகளில் இருந்து 1500 போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

போச்சம்பள்ளி, பழனி, திருச்சி, கோவை உள்ளிட்ட 5 இடங்களில் உள்ள பட்டாலியன் பிரிவில் இருந்து சுமார் 100 பேர் கொண்ட சிறப்பு படை போலீசாரும் மதுரை போலீசார் 3 ஆயிரம் பேரும், ஊர்க்காவல் படையினரும் ஆக மொத்தம் 5 ஆயிரம் போலீசார் இணைந்து 4ம் தேதி வரை திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் கோவில் வீதிகள் மற்றும் ஆவணி மூலவீதிகளில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து