முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆள் இல்லா குட்டி விமானம் மூலம் டெல்லியை தாக்க தீவிரவாதிகள் சதி : உளவுத்துறை எச்சரிக்கையால் போலீசார் உஷார்

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - டெல்லியில் ஆள் இல்லா குட்டி விமானம் மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறையினரின் எச்சரிக்கையை தொடர்ந்து போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் தற்போது டிரோன்ஸ் எனப்படும் ஆள் இல்லா குட்டி விமானங்கள் படப்பிடிப்பு, வர்த்தக சேவைகள், கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் ஆள் இல்லா குட்டி விமானங்கள் மூலமாக இடையூறுகளும் ஏற்படத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் கதிர்வீச்சை வெளிப்படுத்தக் கூடிய ஆபத்தான குட்டி விமானம் ஒன்று ஜப்பானில் உள்ள டோக்கியோவில் பிரதமர் அலுவலகத்தில் தரையிறங்கியது. இதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் நடத்திய சதியாக இருக்கலாம் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சூழலில் இந்தியாவில் டெல்லியிலும் ஆள் இல்லா விமானம் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை அளித்துள்ள அறிக்கையானது தற்போது காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாருக்கு உளவுத்துறை அளித்துள்ள தகவலில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற அமைப்புகள் இது போன்ற தாக்குதல் ஒன்றை நிறைவேற்ற சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். முன் அனுமதி பெற்றுத்தான் குட்டி ஆள் இல்லா விமானங்களை இயக்க வேண்டும் என்று பல்வேறு நகரங்களிலும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். மேலும் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக குட்டி விமானங்களை வாடகைக்கு கொடுக்கும் நிறுவனங்களையும் கண்காணிக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது போன்ற விமானங்களை பயன்படுத்தி நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்களை படம் பிடித்து தாக்குதல் சதியை தீவிரவாதிகள் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.1 லட்சத்தில் கிடைக்கும் இது போன்ற விமானங்களை நாள் ஒன்றிற்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வாடகைக்கு கொடுக்கப்படுகிறது.

தற்போது உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லியில் ஆள் இல்லா விமானங்களை இயக்க தடை விதித்துள்ளனர். நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் இதற்காக ஒருங்கிணைந்து செயல்படவும் கமிஷனர் பாசி உத்தரவிட்டுள்ளார். உளவுத்துறை எச்சரிக்கையால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து