முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை வெற்றி

புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015      விளையாட்டு
Image Unavailable

சென்னை: 8வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 28வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதின. டாசில் வென்ற கொல்கத்தா, முதலில் ஃபீல்டிங் தேர்ந்தெடுத்தது. முதலில் பேட் செய்த சென்னை, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.135 என்ற எளிதான இலக்கையும் விரட்டி பிடிக்க முடியாத கொல்கத்தா 2 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையிடம் தோல்வியடைந்தது.

முதலில் பேட் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. டுபிளெசிஸ் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். ட்வைன் ஸ்மித் 25 ரன்களும், மெக்கல்லம் 19 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா தரப்பில் பியூஷ் சாவ்லா மற்றும் ஆன்ட்ரே ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

எனவே, 135 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு கொல்கத்தா ஆடியது. முதல் ஓவரிலேயே கவுதம் கம்பீர் தான் சந்தித்த முதல் பந்தில் டக் அவுட் ஆனார். ஈஸ்வர் பாண்டே பந்தில், டோணியிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார். ஆனால், மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா சரமாரியாக அடி விளாசினார். அவர் பதினேழே பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் மெக்கல்லத்திடம் கேட்ச் கொடுத்தார்.

இதன் பிறகு சிஎஸ்கே கை ஓங்கியது. மனிஷ் பாண்டே 15 ரன்கள், சூர்ய குமார் யாதவ் 16 ரன்கள் எடுத்து வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யூசுப் பதான் 13 ரன்களிலும், ஆன்ட்ரே ரசல் 4 ரன்களிலும் வெளியேற கொல்கத்தாவின் முதுகெலும்பு உடைபட்டது. பேட்கம்மின்ஸ் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 2 பந்துகளை சந்தித்து, பிராவோ பந்து வீச்சில் அடுத்தடுத்து டக் அவுட் ஆகினர். சென்னை ஸ்டேடியம் கைதட்டலால் அதிர்ந்தது.

கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கைவசம் கொல்கத்தாவிடம் இரு விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன. ஆஷிஷ் நெக்ரா வீசிய அந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. உமேஷ் யாதவ் விக்கெட் வீழ்ந்தது. எனவே கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே கொல்கத்தாவிடம் இருந்தது. டென் டஸ்கத்தே, மற்றும் பிராட் ஹாக் களத்தில் இருந்தனர். பிராவோ கடைசி ஓவரை வீசினார். முதல் பந்து ஆப் சைடு பவுண்டரி எல்லையில் நின்ற பீல்டரிடம் சென்றது.

ஆனால் டஸ்கத்தே ரன் ஓடவில்லை. ஆனால், அதற்கு அடுத்த இரு பந்துகளுமே டஸ்கத்தே பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது. இதனால் சென்னை ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், 4வது பந்தை சிக்சருக்கு தூக்கி ஷாக் கொடுத்தார் டஸ்கத்தே. எனவே கடைசி இரு பந்துகளில் 11 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 5வது பந்தில் டஸ்கத்தே பவுண்டரி அடித்தார். எனவே கடைசி பந்தில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தில் டஸ்கத்தே சிக்சர் அடித்தால், சூப்பர் ஓவரில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் என்பதால் ரசிகர்கள் நகம் கடித்தனர். ஆனால் அந்த பந்தில் நான்கு ரன்கள் கிடைத்தன. எனவே 2 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி வாகை சூடியது.

சென்னை தரப்பில் பிராவோ அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சென்னை அணி சிறப்பான பவுலிங் மற்றும், ஃபீல்டிங் காரணமாக, சிறு ஸ்கோரையும் கொல்கத்தாவை அடிக்கவிடாமல் வெற்றியை பறித்துவிட்டது. இந்த வெற்றியின் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸை கீழே இறக்கி, புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது சென்னை. ஆட்ட நாயகனாக 3 விக்கெட் கைப்பற்றிய ட்வெய்ன் பிராவோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து