முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்த் தலைமையில் பிரதமரை சந்திப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை: அன்புமணி ராமதாஸ் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 3 மே 2015      இந்தியா
Image Unavailable

சென்னை: தி.மு.க. பெறாத வெற்றியை கூட நாங்கள் பெற்றிருக்கிறோம் என்றும் விஜயகாந்த் தலைமையில் சென்று பிரதமரை சந்திப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை’, என்றும் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.  இணைய சேவையை விரிவாக்கம் செய்ய ‘இணையதள சமநிலை சட்டம்’ இயற்றக்கோரி பா.ம.க. சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, சென்னை மண்டல பொறுப்பாளர் மு.ஜெயராமன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.டில்லிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-           

மத்திய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இணையதள சேவையில் புதிதாக ஒரு திட்டத்தை தொடங்குவதற்காக மக்கள் கருத்து கேட்பினை நடத்தியுள்ளது. அந்த புதிய திட்டம் என்னவென்றால் பண வசதி அதிகம் கொண்ட நிறுவனங்களுக்கு இணையதள வசதியை மிகுதியாக கொடுப்பது தான். ஆனால் இந்த கருத்து கேட்பில் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த திட்டம் வேண்டாம் என்ற கருத்தினை பதிவு செய்திருக்கின்றன.            

மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் இந்த புதிய திட்டம் அமலானால், இனி ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனியாக மக்கள் கட்டணம் கட்ட வேண்டிய நிலை ஏற்படும். உதாரணமாக தற்போது, ‘3-ஜி’ மற்றும் ‘பிராட்பேண்ட்’ ஆகிய சேவைகள் மூலமாக ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’, ‘வாட்ஸ்-அப்’, ‘ஸ்கைப்’, ‘யூ-டியூப்’ போன்றவற்றை தேவையான அளவுக்கு நாம் பயன்படுத்த முடிகிறது. இந்த திட்டம் வந்தால் இணையதளத்துக்கென்று தனி வாடகையும், ‘வாட்ஸ்-அப்’பில் கருத்துகளை ‘அப்டேட்’ செய்ய தனி கட்டணமும் வசூலிக்கப்படும். இதன்மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ.100-க்கு செல்போனில் ‘நெட் கார்டு’ உபயோகிக்கும் ஒருவர் இனி ரூ.170 வரை செலவிட நேரிடும்.

அமெரிக்காவில் இப்படியொரு திட்டத்தை கொண்டுவர அந்நாட்டு அரசு முயற்சித்த போது மக்கள் போராட்டம் நடத்தி அதனை உடைத்தெறிந்தனர். உலகின் சிறந்த நிலைகளில் உள்ள பிரேசில், நெதர்லாந்து, சிலி போன்ற நாடுகளில் இணையதள சமநிலை சட்டம் என்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதுபோல, இந்தியாவிலும் இந்த சட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வரவேண்டும். இணையதள சேவையை கூடுதலாக விரிவாக்கம் செய்யவேண்டும். முதலாளிகளுக்கு சாதகமாக இயங்கும் மனநிலையை கைவிட்டு, மக்களுக்கான சிறப்பு திட்டங்களை அமல்படுத்தவும், வழிநடத்தவும் மத்திய அரசு இருக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.            

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு:-           
கேள்வி:- காவிரியில் மேகதாது அணை கட்டும் பிரச்சினை குறித்து பிரதமரிடம் விவாதிக்க சமீபத்தில் விஜயகாந்த் தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் குழுவில் நீங்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை?           
பதில்:- தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு மிகவும் முக்கியமான பொறுப்பாகும். ஆனால் சட்டமன்ற கூட்டத்துக்கோ, மக்கள் பிரச்சினைக்கோ செல்லாத அரசியல் நடவடிக்கை தெரியாத விஜயகாந்த் தலைமையில் பிரதமரை சந்திப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. அரசியலுக்காக செல்லும் கூட்டத்தோடு செல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து