முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் பொதுமக்களிடம் டெபாசிட் வசூலித்து கோடிக்கணக்கில் மெகா மோசடி பழம்பெரும் நடிகரின் மருமகன் உள்ளிட்ட 3 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 3 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: பொதுமக்களிடம் பணத்தை முதலீடாக பெற்று கோடிக்கணக்கில் மெகா மோசடியில் ஈடுபட்டதாக சென்னையில் மோசடி நிதிநிறுவனத்தின் இயக்குனர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் பழம்பெரும் நடிகரின் மருமகன் ஆவார். இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

சென்னை தியாகராயநகரில் கடந்த 1991–ம் ஆண்டு எக்ஸ்பிரஸ் பைனான்ஸ் என்ற பெயரில் நிதிநிறுவனம் ஒன்று, ராமச்சந்திரன் என்பவரால் தொடங்கப்பட்டது. பின்பு இந்த நிதி நிறுவனம், ஹெலியாஸ் மதேசன் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்று பெயர் மாற்றப்பட்டது. இதன் அலுவலகமும் காஞ்சீபுரம் மாவட்டம், மகேந்திரா சிட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 7 துணை நிறுவனங்களும் தொடங்கப்பட்டன. இவற்றில் 4 நிறுவனங்கள் அமெரிக்காவில் செயல்பட்டன. சிங்கப்பூரிலும் துணை நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து டெபாசிட் பணத்தை முதலீடாக பெற்றன. மொத்தம் 6540 பேரிடம், ரூ.55 கோடியே, 25 லட்சத்து, 70 ஆயிரம் முதலீடாக பெறப்பட்டன.

ஆனால் டெபாசிட் செய்த பொதுமக்களிடம் இருந்து இந்த கம்பெனி மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் நிறைய புகார்கள் குவிந்தன. மோசடி சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 1–ந் தேதி அன்று இந்த நிதி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்கள் ராமச்சந்திரன், முரளி கிருஷ்ணா மற்றும் இயக்குனர் திவாகர்சாய்யெரா ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தியா முழுவதும் இருந்து 575 முதலீட்டாளர்கள் இதுவரை புகார் கொடுத்துள்ளனர். அவர்களில் 206 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். புகார் கொடுத்தவர்கள் செய்த பண டெபாசிட் ரூ.23 கோடியே, 46 லட்சத்து, 32 ஆயிரம் ஆகும். ரூ.45 லட்சம் அளவுக்கு வட்டி கொடுக்காமல் முறைகேடு செய்யப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார்கள் தொடர்ந்து குவிந்து வருகிறது. விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது.இவ்வாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ராமச்சந்திரன், முரளிகிருஷ்ணா, திவாகர்சாய்யெரா ஆகிய 3 பேரும் 60 வயதை தாண்டியவர்கள். ராமச்சந்திரன் மறைந்த பழம்பெரும் நடிகர் ஒருவரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து