முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழறிஞர் கால்டுவெல் சிலைக்கு அமைச்சர்கள் மாலை

வியாழக்கிழமை, 7 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: சென்னையில் தமிழறிஞர் கால்டுவெல் சிலைக்கு நேற்று அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
கடந்த 2014–ம் ஆண்டு  முதலமைச்சர் ஜெயலலிதா தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெலின் இரு நூற்றாண்டு நிறைவு விழாவை, அரசு விழாவாகக் கொண்டாட ஆணையிட்டார்.  ஜெயலலிதாவின் ஆணையின்படி அவரின் திருவுருவச் சிலைக்கு அவரின் பிறந்த நாளான இன்று (7–ந்தேதி) தமிழ்நாடு அரசின் சார்பில்  அமைச்சர்கள் மாலை அணிவித்து, மலர் தூவினார்கள். மேலும், ஜெயலலிதா ஒவ்வொரு வருடமும் தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெலின் பிறந்த நாளினை அரசு விழாவாகக் கொண்டாட ஆணையிட்டார்.

தமிழறிஞர் கால்டுவெல்  7.5.1815-–ல் அயர்லாந்தில் பிறந்து, ஸ்காட்லாந்தில் கல்வி கற்று, 8.1.1838 அன்று இந்தியா வந்து 53 ஆண்டுகள் அயராது தமிழ்ப்பணி, இறைப்பணி, கல்விப்பணி மற்றும் சமூகப் பணியாற்றினார்.  1891-–ம் ஆண்டில் தமது 77–வது வயதில் தமிழ்நாட்டில் கொடைக்கானலில் காலமானார்.  இவரது உடல் இடையன்குடியில் அவரால் எழுப்பிய கோயிலிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அவர் ஸ்காட்லாந்தில் கல்வி பயின்று ஆங்கிலக் கிறித்துவ சங்கத்தைச் சார்ந்து 23-–வது வயதில் சமயப் பணிபுரிவதற்காகத் தமிழகம் வந்தார்.  திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியை இருப்பிடமாகக் கொண்டு தமிழ்ப்பணி ஆற்றி வந்தார்.  இவர் இலத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ, ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மேலைநாட்டு மொழிகளிலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற தென்னக மொழிகளிலும் சிறந்த புலமைப் பெற்றிருந்தார்.

இதன் பயனாக திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative grammar of the Dravidian Languages) என்னும் ஒப்பிலா உயர் நூல் ஒன்றை எழுதினார்.  இந்நூலில் ஆரிய இன மொழிகள் வேறு, திராவிட மொழி இனங்கள் வேறு, தமிழுக்கும் வடமொழிக்கும் எவ்வித உறவும் இல்லை, வடமொழி இன்றியே தனித்து இயங்கக் கூடியது தமிழ்” எனத் தக்க சான்று காட்டி விளக்கியவர். இந்நூல், தமிழின் மொழியியல் ஆய்வுக்கு முன்னோடியாக அமைகிறது.

இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் வட மொழியே என்றிருந்த காலத்தில், ஆரியத்தினின்று தோன்றியதே தமிழ் என்ற கொள்கையை மறுத்துரைத்த பெருமை கால்டுவெல்லையே சாரும்.  திராவிட மொழிகள் ஒரு தனியினம், அவற்றிற்குத் தாய், தமிழே என விளக்கி உலகுக்கு உணர்த்தி மேலும் மொழியியல் ஆராய்ச்சியில் நமக்கு வழிகாட்டிய விடிவெள்ளி இவரே.  திராவிட மொழிகட்குப் புத்துயிர் அளித்தவர், இராபர்ட் கால்டுவெல் ஆவார்.  இவரின் ஒப்பிலக்கணப் பணியைப் பாராட்டி, சென்னைப் பல்கலைக்கழகமும், ராயல் ஏசியாடிக் சொசைட்டியும் இவருக்கு ‘இலக்கிய வேந்தர்’, வேத விற்பன்னர்” என்ற பட்டங்களை வழங்கிப் பெருமைப்படுத்தின.  ‘எத்தனையோ பேர் கூடிச் செய்ய இயலா பெரும்பணியை, எத்தனையோ பிறவி எடுத்துச் செய்யும் தமிழ்த் தொண்டினை ஒரு பிறவியில் ஒருவராகவே இருந்து செய்து செந்தமிழை உலகறியச் செய்தவர் என்றால் அது மிகையாகாது.

அவர் பிறந்த நாளையும், அவரின் தமிழ்ப் பணியையும் நினைவுகூறும் வகையில் சென்னை காமராசர் சாலையில் (மெரினா கடற்கரை) அமைந்துள்ள இராபர்ட் கால்டுவெலின் திருவுருவச் சிலைக்கு நேற்று காலை 9 மணியளவில் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இராபர்ட் கால்டுவெலின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் பா.வளர்மதி, கே.டி.ராஜேந்திர பாலாஜி, டி.கே.எம். சின்னையா, எஸ்.கோகுல இந்திரா, பி.வி. ரமணா, கே.சி.வீரமணி, எஸ். அப்துல் ரஹீம், சென்னை மாநகராட்சி மேயர் சைதை சா.துரைசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் முனைவர் மூ.ராசாராம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து