முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை பிளே ஆப் சுற்றை உறுதி செய்தது

சனிக்கிழமை, 16 மே 2015      விளையாட்டு
Image Unavailable

 மொகாலி - 8-வது ஐ.பி.எல். போட்டியின் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதை உறுதி செய்தது.  முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை அணி 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்களை எடுத்து அபார வெற்றியை ருசித்தது.பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் பெய்லி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக சகாவும் வோராவும் களமிறங்கினர். சகா 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். வோராவுடன் பெய்லி இணைந்தார். ஆனால் அவர் 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதேபோல் அடுத்தடுத்து பஞ்சாப் அணி வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். சென்னை அணியின் அனைத்து பந்து வீச்சாளர்களிடமும் பஞ்சாப் அணி வீரர்கள் சிக்கி சின்னாபின்னமாகினர். 15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை எடுத்து பரிதாப நிலையில் இருந்தது.

ஆனால் பின்வரிசை வீரர்களான பட்டேலும் தவானும் நிலைத்து நின்று பஞ்சாப் அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினர். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது.  131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. அதன் தொடக்க வீரர்களாக ஹஸ்ஸியும் மெக்கல்லமும் விளையாடத் தொடங்கினர். ஆனால் ஹஸ்ஸி முதல் ஓவரின் கடைசி பந்திலும் மெக்கல்லம் அடுத்த ஓவரிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி அதிர்ச்சியளித்தனர். சென்னை அணி 10 ரன்களை எட்டுவதற்குள் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இருப்பினும் சென்னை அணியின் டுபிளெஸ்சஸ் ரெய்னா ஜோடி நிதானமாக நிலைத்து நின்று ரன்களை அபாரமாக குவித்தது. சென்னை அணி 102 ரன்களை எட்டிய நிலையில் டுபிளெஸ்சஸ் 55 ரன்களில் அவுட் ஆனார். அவர் 41 பந்துகளில் இந்த ரன்களை எட்டினார். இதில் 5 பவுண்டரிகள், 1 சிக்சர் அடங்கும். களத்தில் இருந்த ரெய்னாவுடன் கேப்டன் டோணி களமிறங்கி கலக்கினார். சென்னை அணி 16.5ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ரெய்னா 24 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். கேப்டன் டோணி 16 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். இதில் 2 பவுண்டரிகளும், 2 சிகஸர்களும் அடங்கும்.இதன் மூலம் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தி புள்ளிபட்டியலில் முதலிடத்தை தக்க வைத்ததுடன் ப்ளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து