முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த தொண்டரின் குடும்பத்திற்கு ஜெயலலிதா ரூ 3 லட்சம் உதவி

திங்கட்கிழமை, 18 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அதிமுக தொண்டர் குடும்பத்திற்கு கட்சியின் சார்பில் ரூ 3 லட்சம் குடும்ப நல நிதியாக வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து மக்களின் முதல்வரும் அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:  உங்கள் அன்புச் சகோதரியாகிய எனது தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு மீண்டும் மலர்வதில் ஏற்பட்டிருக்கும் கால இடைவெளி குறித்து நமது அரசியல் எதிரிகள் பரப்பிய வதந்திகளைக் கேட்டு, வட சென்னை தெற்கு மாவட்டம், எழும்பூர் பகுதி 77-ஆவது தெற்கு வட்டக் கழக மேலமைப்புப் பிரதிநிதி  S..ராஜா என்பவர் மனம் வெதும்பி ரயில் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்ற செய்தி கேட்டு நான் பெரிதும் வேதனைப்படுகிறேன். 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையின் மீது மிகுந்த பாசமும், அன்பும் கொண்ட கழக உடன்பிறப்புகள் எந்தச் சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல் நம்பிக்கையோடும், மன உறுதியோடும் செயல்பட வேண்டும் என்று நான் பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறேன். நமது அரசியல் எதிரிகள் கழகத்தின் வளர்ச்சியினைக் கண்டும், வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேருவதைக் கண்டும் பொறாமை கொண்டவர்களாக பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். என்னை வீழ்த்த நினைத்தவர்கள் ஒரு போதும் வென்றதில்லை.  பொய்ச் செய்திகளையும், பொருளற்ற வதந்திகளையும் பரப்பி, அதன் மூலமாவது அரசியல் மறு வாழ்வு பெற்றுவிட முடியுமா என்று முயற்சிக்கும் வீணர்கள் நமக்கு எதிராக தொடர்ந்து பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர்.  இவற்றையெல்லாம் புறந்தள்ள வேண்டும் என்று கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

அனைத்து சோதனைகளையும் கடந்து வெற்றி முகட்டில் நாம் நிற்கின்ற நேரம் இது.  மகிழ்ச்சியும், பெருமிதமும் பொங்க, ஆனந்தத்துடன் வெற்றி விழா கொண்டாடும் காலம் இது.  சட்டத்தின் ஒழுங்குகளையும், வழிகாட்டும் நெறிகளையும் மதித்து அவற்றின்படி நம்முடைய அரசியல், ஆட்சி, நிர்வாக நடவடிக்கைகள் அமைய வேண்டும்.  அப்படித் தான் எப்பொழுதுமே நாம் செயல்பட்டு வந்திருக்கிறோம்.  எனவே தான், அடுத்தடுத்து  நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஒரு திட்டமிட்ட கால அட்டவணையின்படி நடைபெற்று வருகின்றன.  இதில் எந்தக் குழப்பமும் இல்லை; எந்தச் சிக்கலும் இல்லை.  நிதானமும், ஒழுங்கும் சட்டத்தின் வழிகாட்டுதல்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் பின்பற்றப்படுவதைத் தவறாகப் புரிந்து கொண்டு, நிதானம் இழக்கும் அவசரச் செயல்களில் கழக உடன்பிறப்புகள் ஈடுபட்டு என்னை மன வேதனையில் ஆழ்த்த வேண்டாம் என்று  மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் நினைத்தது குறித்த நேரத்தில் நடக்கும்.  இதை யாராலும் தடை செய்ய முடியாது.  ஆகவே, யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.  அன்புச் சகோதரர் . ராஜா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும் அவரது குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக 3,00,000/- ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து