முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 மாதங்களுக்குப் பிறகு முதல் பொதுநிகழ்ச்சி - வரும் 22-ல் தலைவர்கள் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை

செவ்வாய்க்கிழமை, 19 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும் மக்களின் முதல்வருமான ஜெயலலிதா, வருகிற 22-ந் தேதி பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார் என்று அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான  மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த பெங்களூரு உயர்நீதிமன்றம் இம்மாதம் 11-ந் தேதி ஜெயலலிதா குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தது. மேலும் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரையும் கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. அபராத தொகையையும் ரத்து செய்தது.

இதனை தொடர்ந்து அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக போயஸ் கார்டனில் அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் அ.தி.மு.க.வினர் கொண்டாடி மகிழ்ந்தனர். ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும், தமிழ் திரையுலக கலைஞர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கும் நாளை அதிமுகவினர் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவரது கட்சி தலைவர்கள் நேர்த்தி கடனாக மொட்டை போடுதல், தங்கத்தேர் இழுத்தல், பாதயாத்திரை செல்லுதல், சிறப்பு பூஜைகளை நடத்துதல் போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் வரும் 22-ந் தேதி காலை 7 மணிக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.

அந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்படுகிறார். அன்றைய தினம் கவர்னரிடம் ஜெயலலிதா சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையில் வருகிற 22-ந் தேதி ஜெயலலிதா 8 மாதத்திற்கு பின் போயஸ் கார்டனை விட்டு வெளியே வந்து மக்களை சந்திக்கிறார். அன்றைய தினம் பெரியார், அண்ணா, மற்றும் அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு ஜெயலலிதா மாலையணிவித்து மரியாதை செய்ய இருக்கிறார்.  இதனை அதிமுக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

அதிமுக பொதுச் செயலாளர், 22.5.2015 – வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில், சென்னை, அண்ணா சாலை, ஸ்பென்சர் அருகே அமைந்துள்ள கழக நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கிறார். தொடர்ந்து, அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கும், அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலைக்கும், மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வழக்கிலிருந்து விடுதலையான பின்னர் அவர் கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து