முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானில் கடமை தவறிய 11 போலீஸாருக்கு ஓராண்டு சிறை

புதன்கிழமை, 20 மே 2015      உலகம்
Image Unavailable

காபூல்: ஆப்கானிஸ்தானில் இளம்பெண் ஒருவரை அடிப்படைவாத கும்பல் அண்மையில் அடித்து கொலை செய்தது. அதை தடுக்க தவறிய 11 போலீஸாருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஓராண்டு சிறை விதித்தது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைச் சேர்ந்த பர்குந்தா (27) என்பவர் கடந்த மார்ச் 19-ம் தேதி அந்த நகரின் மசூதிக்குச் சென்றார். அங்கு அவர் புனித நூலான குர்ஆனின் சில பக்கங்களை எரித்ததாக சிலர் குற்றம் சாட்டினர்.  அதைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கும்பல் திரண்டு வந்து அந்தப் பெண்ணை அடித்து உதைத்து, கம்பால் தாக்கி மிகக் கொடூரமாக கொலை செய்தனர். பின்னர் அவரின் உடலை தீ வைத்து எரித்தனர். அந்த கொடூர காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அந்தப் பெண்ணின் இறுதிச் சடங்கில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று மத அடிப்படைவாதத் தலைவர்கள் சிலர் பகிரங்கமாக அறிவித்தனர். ஆனால் பெரும் எண்ணிக்கையிலான பெண் சமூக ஆர்வலர்கள் இறுதிச் சடங்கில் குவிந்தனர். அவர்களை சவப்பெட்டியை சுமந்து சென்று அப்பெண்ணின் உடலை அடக்கம் செய்தனர். மேலும் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கோரி ஆப்கானிஸ்தான் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.  நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்ததாக காபூல் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். சம்பவத்தின்போது அப்பகுதியில் பணியில் இருந்த போலீஸார் உட்பட மொத்தம் 49 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை காபூலில் உள்ள முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் கடந்த மாதம் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எட்டு பேருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. போதிய சாட்சிகள் இல்லாததால் 18 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 போலீஸார் மீதான தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. இளம்பெண்ணை காப்பாற்ற தவறிய குற்றத்துக்காக 11 போலீஸாருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி சபியுல்லா உத்தரவிட்டார். போதிய ஆதாரங்கள் இல்லாததால் 8 போலீஸார் விடுதலை செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து