முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை - பந்துவீச்சாளர்களுக்கு கேப்டன் டோணி பாராட்டு

சனிக்கிழமை, 23 மே 2015      விளையாட்டு
Image Unavailable

ராஞ்சி: ஐ.பி.எல். போட்டியின் 2வது தகுதி சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது.

முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஐ.பி.எல். முதலாவது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 25 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அடுத்ததாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை தோற்கடித்தது. இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மோதின.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோணி பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கெய்ல், கேப்டன் கோஹ்லி களமிறங்கினர். முதல் 2 ஓவர்களை இருவரும் வெளுத்து விளையாடி மிரட்டினர். ஆனால் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களோ உஷாராக பந்துவீசி மடக்கத் தொடங்கினர். இதனால் பெங்களூரு அணியின் தொடக்க வேகம் அப்படியே முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டதுடன் அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியது சென்னை அணி. 4.1வது ஓவரில் கோஹ்லியும் அதே ஓவரின் கடைசி பந்தில் அதிரடி மன்னன் டிவில்லியர்ஸும்  அவுட் ஆனதால் பெங்களூரு நிலைகுலைந்தது. கோஹ்லி 12 ரன்களிலும் டிவில்லியர்ஸ் ஒரே ஒரு ரன்னையும் எடுத்து அவுட் ஆனார்.

இதேபோல் மந்தீப் சிங் சிறிது நேரமே நின்ற நிலையில் அவுட் ஆனார். ஆனால் தொடக்க வீரரான கிறிஸ் கெய்ல் மட்டும் நிலைத்து நின்று நிதானமாக ரன்களைக் குவித்து அரை சதத்தை நோக்கி பயணித்தார். அவர் 43 பந்துகளில் 41 ரன்களை எடுத்த போது அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து சற்று விறுவிறுப்பாக விளையாடி தினேஷ் கார்த்திக்கும் அவுட் ஆனார். பின்வரிசை வீரர்களும் நிலைத்து ரன்களைக் குவிக்கவில்லை. கடைசி ஓவரில் மட்டும் 2 விக்கெட்டுகளை பெங்களூரு அணி பறிகொடுத்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் இழப்பு 139 ரன்களை எடுத்தது.

140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய சென்னை சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மித்தும் ஹஸ்ஸியும்  நிதானமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினர். ஆனால் ஸ்மித் 3.1 ஓவரில் 12 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் ஹஸ்ஸியுடன் டூபிளெஸ்சிஸ் இணைந்தார். இருவரும் நிதானமாக ரன்களை குவிக்கத் தொடங்கினர். 22 பந்துகளில் 21 ரன்களை எடுத்த நிலையில் டூபிளெஸ்சிஸ் அவுட் ஆனார். அப்போது சென்னை அணி 9.2 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 61 ரன்களை எடுத்தது.

ஹஸ்ஸியுடன் இணைய வந்த ரெய்னா அதே வேகத்தில் ரன் ஏதுவும் எடுக்காமல் 2வது பந்தில் அவுட் ஆனார். பின்னர் ஹஸ்ஸியுடன் கேப்டன் டோணி கை கோர்த்தார். இந்த போட்டியில்  போட்டியில் வென்றாக வேண்டிய நிலையில் சென்னை அணி பொறுப்புணர்ந்து விளையாடியே வந்தது. ஹஸ்ஸி 43 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். 16 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்களை எட்டியிருந்தது.

இருப்பினும் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஹஸ்ஸி அவுட் ஆனார். களத்தில் கேப்டன் டோணியும் நெகியும் நிதானமாக ரன்களைக் குவித்து வெற்றி இலக்கை நெருங்கிக் கொண்டிருந்தனர். 18.5வது பந்தில் நெகி 12 ரன்கள் எடுத்த நிலையிலும் 18.6வது பந்தில் பிராவோ டக் அவுட் ஆகவும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இருப்பினும் கேப்டன் டோணி இருக்க பயமேன் என்ற தெம்பில் சென்னை ரசிகர்கள் காத்திருந்தனர். பெங்களூரு அணியின் 139 ரன்களை எட்டியிருந்த நிலையில் கேப்டன் டோணி கடைசி ஓவரின் 4வது பந்தில் அவுட் ஆனார்.

பின்னர் வந்த அஸ்வின் கடைசி ஓவரின் 5வது பந்தில் ஒரு ரன் அடிக்க சென்னை அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்களை எடுத்தது. இதனால் சென்னை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. இன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை அணி 6வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் டோணி கூறியதாவது: 140 ரன்கள் என்ற இலக்கு, அடித்து ஆடுவதா அல்லது விக்கெட்டுகளை காத்துக் கொண்டு சீராக துரத்துவதா என்ற இரட்டை நிலையை எப்பவும் ஏற்படுத்தும். இரவு நேர பனிப்பொழிவு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும் குறிப்பிடத்தகுந்த அளவில் இருந்தது. அஸ்வினுக்கு எனது பாராட்டுகள். அவர் மிகச்சிறப்பாக வீசியதாக நான் கருதுகிறேன். அவருக்கு உறுதுணையாக வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக வீசினர்.

கெயிலுக்கு எதிராக ரெய்னாவை பயன்படுத்தினேன், காரணம் இடது கை ஸ்பின்னர்களை அவருக்கு எதிராக பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்தோம். இந்தப் பிட்சில் இரு அணிகளுக்கும் சமமான ஸ்கோர் எது என்பதை நிர்ணயிக்க முடியவில்லை. இது உயர்-அழுத்த போட்டி, பெங்களூரு அணி 10 அல்லது 12 ரன்கள் குறைவாக எடுத்ததாக நான் நினைக்கிறேன். அனைத்துப் போட்டிகளிலும் விளையாடும் பழக்கம் எங்களிடம் ஏற்பட்டுவிட்டது. சில போட்டிகளில் சரியாக ஆடவில்லை. இறுதிப் போட்டியில் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவோம்.  இவ்வாறு கேப்டன் டோணி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து