முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5–வது முறையாக மீண்டும் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்பு

சனிக்கிழமை, 23 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை,  மே 24: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று  5-வது முறையாக  தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. ஜெயலலிதா தலைமையில் 28 அமைச்சர்களும் நேற்று பதவியேற்றனர்.  தமிழக கவர்னர் ரோசய்யா, இவர்களுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும்  செய்து வைத்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பையொட்டி ஜெயலலிதா முதலமைச்சர் பதவியிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டது.

இதன் மீதான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பெங்களூரு உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பையொட்டி ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் பதவியேற்கும் நிலை உருவானது. இதனையடுத்து நேற்று முன்தினம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை கழக அலுவலகத்தில் நடைபெற்றது.  அதில் சட்டமன்ற அதிமுக தலைவராக ஜெயலலிதா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அதையடுத்து  கவர்னர்; ஜெயலலிதாவுக்கு முதலமைச்சர் பதவியேற்குமாறு அழைப்பு விடுத்தார்.பிறகு அவர் அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 217 நாட்களுக்குப் பிறகு ஜெயலலிதாவை நேரில் கண்ட அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.அவர் சென்ற வழி நெடுகிலும் சாலையோரங்களில் இருபுறமும் மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நின்று ஜெயலலிதாவை வரவேற்று மகிழ்ந்தனர்.   இதனையடுத்து நேற்று .ஜெயலலிதா தலைமை யிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் மிகவும் கோலாகலமாக நடந்தது.

இதற்காக பல்கலைக்கழக வளாகப் பகுதியில் விரிவான ஏற்பபாடு   செய்யப்பட் டிருந்தன.புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கு வருபவர்கள் காலை 10 மணிக் கெல்லாம் தங்களுக்கு ஒதுக் கப்பட்ட இருக்கைகளில் அமர வேண்டும் என்று நேற்று பிற்பகல் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் காலை 9 மணிக் கெல்லாம் சென்னை பல் கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கு பகுதியில் அ.தி.மு.க.வினர் குவியத் தொடங்கினார்கள்.

10 மணிக்குள் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், புதிய அமைச்சர்கள் 28 பேர் மற்றும் 144 எம்.எல்.ஏ.க்கள் வந்திருந் தனர். தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் விழாவில் பங்கேற்றனர். 10 -45 மணிக்கு ஜெயலலிதா பதவி ஏற்புவிழாவுக்கு போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட்டார். ஜெயலலிதா 10.55 மணிக்கு வந்தார். அவரை  அவரை தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மற்றும் மூத்த அமைச்சர்கள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.அரசு உயர் அதிகாரிகளும், அ.தி.மு.க. மூத்த தலைவர்களும் உற்சாக மாக வரவேற்றனர்.

விழா மேடைக்கு ஜெயலலிதா வருகை தந்த போது அரங்கத்தில் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் வாழ்த்து முழக்கம் எழுப்பினர்.இதை யடுத்து சிறிது நேரத்தில் கவர்னர் ரோசய்யா வந்தார். அவரை ஜெயலலிதா வணங்கி  ப்பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.பின்னர் ஜெயலலிதா அமைஅச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களை கவரனருக்கு அறிமுகபடுத்தி வைத்தார்.இதைத் தொடர்ந்து தேசிய கீதமும், தமிழ் தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது.பின்னர் பதவியேற்பு விழா நிகழ்ச்சி தொடங்கியது.

11.05 மணியளவில் முதலாவதாக ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை ஏற்றார்.  பதவியேற்பு உறுதிமொழியையும்,ரகசிய காப்பு பிரமாணத்தையும் அவர் எடுத்து கொண்டு,இதற்கான கோப்பில் அவர் கையெழுத்திட்டதும் அரங்கமே அதிரும் வகையில் கரவொலியும், வாழ்த்து முழக்கங்களும் எழுந்தன.முதலமைச்சர் பதவியேற்ற ஜெயலலிதா ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழி ஏற்பதாக கூறினார்.   பதவியேற்ற பின் தமிழக கவர்னர் ரோசய்யா ஜெயலலிதாவிற்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதன் மூலம் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக 5-வது முறையாக பதவியேற்று சாதனை படைத்துள்ளார்.

இதையடுத்து  2பிரிவுகளாக 28 அமைச்சர்கள்  பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் ஏற்றனர்.  முதலாவதாக  ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, மோகன், பா.வளர்மதி,  செல்லூர் ராஜூ, காமராஜ், தங்கமணி, செந்தில்பாலாஜி, எம்.பி.சம்பத், டி.கே.எம்.சின்னையா ஆகிய 14 பேர்களும் பதவியேற்றனர். இதையடுத்து இரண்டாவதாக எஸ்.கோகுலஇந்திரா, டாக்டர் சுந்தரராஜ், எஸ்.பி.சண்முகநாதன், என்.சுப்பிரமணியம், கே.ஏ.ஜெயபால், முக்கூர் சுப்பிரமணியம், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, பி.வி.ரமணா, கே.சி.வீரமணி, தோப்பு வெங்கடாசலம், பூனாட்சி, அப்துல் ரஹீம், டாக்டர் விஜயபாஸ்கர் ஆகிய 14 பேர்களும் பதவியேற்றனர்.  இவர்கள் அனைவருக்கும் கவர்னர் ரோசய்யா பதவியேற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனையடுத்து கவர்னர் மற்றும் முதலமைச்சருடன் அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். இதையடுத்து மீண்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு பதவியேற்பு விழா நிறைவடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து