முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திரா, தெலுங்கானாவில் வெயிலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 750ஆக அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 26 மே 2015      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 750ஐத் தாண்டியுள்ளது. கோடைக்காலம் முடிவடைய உள்ள நிலையில், இந்தியாவின் பல மாநிலங்களின் உச்சகட்ட வெயில் அடித்து வருகிறது. குறிப்பாக தமிழகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயிலின் உக்கிரம் தாளாமல் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில், வெயிலின் உக்கிரம் மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயிலின் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் மாலை சுமார் 6 மணியளவில் கிடைத்த தகவலின்படி, இரு மாநிலங்களிலும் மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 750ஐத் தாண்டிவிட்டதாக தெரிய வந்துள்ளது. இதில் அதிகப்பட்சமாக ஆந்திராவில் மட்டும் 551 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தெலுங்கானாவில் 200 பேரும், ஒடிசாவில் 23 பேரும் பலியாகியுள்ளனர். இதனால், தொழிலாளர்கள் குறிப்பாக காலை 11.30 முதல் மாலை 4 வரை வேலை செய்ய வேண்டாம் என ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசுகள் அறிவித்துள்ளன.

மேலும், வயதானவர்கள் வெயிலில் அதிகம் அலைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்லும் மக்கள், குடை, தொப்பி உள்ளிட்ட பொருட்களால் வெயிலில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதோடு அதிக நீர் அருந்துவதன் மூலம் வெயிலின் கொடுமையைச் சற்று சமாளிக்க முடியும் என்றும், தினமும் இருவேளைக் குளிப்பதன் மூலம் உடலை ஓரளவுக்கு குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இயலும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

கடந்த பத்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தான் அதிகபட்சமான வெப்ப நிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இனி வரும் கோடை காலங்களிலும் இதை விட அதிக வெப்பம் தாக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து