முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் இஸ்ரேல் பிரதமருக்கு ஊழல் வழக்கில் மேலும் 8 மாதம் சிறை

செவ்வாய்க்கிழமை, 26 மே 2015      உலகம்
Image Unavailable

ஜெருசலம் - ஊழல் வழக்கில் முன்னாள் இஸ்ரேல் பிரதமர் எஹுத் ஓல்மெர்டுக்கு ஜெருசலம் நீதிமன்றம் 8 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை இஸ்ரேலின் பிரதமராக இருந்தவர் எஹுத் ஓல்மெர்ட்(68). அவர் மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால் பதவி விலக வைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் பதவியில் இருக்கையில் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு கடந்த ஆண்டு மே மாதம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. அவர் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார். அவரின் மேல்முறையீட்டு மனு இன்னும் 2 மாதங்களில் விசராணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எஹுத் ஜெருசலம் நகர மேயராக இருந்தபோதில் இருந்து வர்த்தக அமைச்சரானது வரை அதாவது 1997ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அவர் அமெரிக்காவைச் சேர்ந்த நிதிநிறுவன அதிபர் மோரிஸ் தலான்ஸ்கியிடம் கவர்களில் பலமுறை பணம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வழக்கு தொடரப்பட்டது. நாட்டின் பெயரை கூறி வாங்கப்பட்ட பணத்தை எஹுத் தனது சொந்த விஷயங்களுக்கு பயன்படுத்தியுள்ளார். இந்த வழக்கில் இருந்து எஹுத் கடந்த 2012ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அவரின் முன்னாள் உதவியாளர் ஸுலா ஜகேன் என்பவர் எஹுத் மோரிஸிடம் இருந்து பணம் பெற்றதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் அளித்தார்.

இதையடுத்து மீண்டும் நடத்தப்பட்ட அந்த வழக்கில் எஹுதுக்கு 8 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்தும் அவர் மேல்முறையீடு செய்ய உள்ளார். அவரது மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தும் வரை அவர் சிறையில் அடைக்கப்பட மாட்டார். ஆனால் அவரது மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு அவருக்கு எதிராக வருமாயின் ஊழல், லஞ்ச வழக்குகளில் சிறையில் அடைக்கப்படும் முதல் முன்னாள் பிரதமர் ஆவார் எஹுத்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து