முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் காவல்துறைக்கு புதிய கட்டிடங்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 26 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, மதுரை மாநகர் ஆயுதப்படை வளாகத்தில் ரூ.20.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 226 காவல் துறை குடியிருப்புகளையும் தமிழகம் முழுவதும் இதே போன்று காவல் துறை, தீயணைப்புத்துறைக்கும் ரூ.423.50 கோடி மதிப்பீட்டில் கட் டப்பட்டுள்ள பல்வேறு புதிய கட்டிடங்களையும் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, குற்ற நிகழ்வுகளைக் கண்டுபிடிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, போக்குவரத்தைச் சீர்படுத்துவது, இயற்கை இடர்பாடுகளின் போது மீட்புப் பணிகளை மேற்கொள்வது போன்ற இன்றியமையாப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் மேலும் சிறக்கும் வகையில் புதிய காவல் நிலையங்களைத் தோற்றுவித்தல், காவல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டுதல்,  காவல் துறை குடியிருப்புகள் கட்டுதல், காவல் கண்காணிப்பிற்காக புதிய ரோந்து வாகனங்களை வாங்குதல் போன்ற முனைப்பான நடவடிக்கைகளை  முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

மதுரை மாநகர் ஆயுதப்படை வளாகத்தில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 20 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 226 காவல் துறை குடியிருப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள 27 மாவட்டங்களில் 321 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  3918 காவல்துறை  குடியிருப்புகள் சென்னை, எழும்பூரில் 31,335 சதுர அடி பரப்பளவில் அனைத்து  நவீன வசதிகளுடன் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 8 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும  அலுவலகம்;  சென்னை மாநகரிலுள்ள மதுரவாயல் மற்றும் மடிப்பாக்கம், மதுரை மாநகரிலுள்ள விளக்குத் தூண், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சாயல்குடி உட்பட தமிழ்நாடு முழுவதும்  26 மாவட்டங்களில் 31 கோடியே 12 லட்சம்  ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கடலோர காவல் நிலையங்கள் உள்ளிட்ட 68 காவல் நிலையங்கள்

சென்னை மருதம் வளாகத்தில் அமைந்துள்ள தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை (பாதுகாப்பு பிரிவு) கூடுதல் தளம், சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதான வளாகத்தில் பயிற்சி மையம் மற்றும் தங்குமிடங்கள், திருச்சிராப்பள்ளி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஆயுதப்படைக்கு நிர்வாக அலுவலகங்கள்; புழல், மதுரை, இராமநாதபுரம் மாவட்டம் - கமுதி ஆகிய இடங்களில் காவல் ஆளிநர்களுக்கான தங்குமிடங்கள்; அரியலூர், கோயம்புத்தூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் காவல் பல்பொருள் அங்காடி கட்டடங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் 50 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை கட்டடங்கள்;காஞ்சிபுரம் மாவட்டம் - திருக்கழுக்குன்றம், திருவண்ணாமலை மாவட்டம்- செங்கம் மற்றும் கீழ்பெண்ணாத்தூர், கடலூர் மாவட்டம் - பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம்,   திருப்பூர் மாவட்டம் - பல்லடம் உட்பட பல இடங்களில் 11 கோடியே 38 லட்சம்  ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 130 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்புகள்;தஞ்சாவூரில் 8,344 சதுர அடி  பரப்பளவில் தரை மற்றும் ஒரு தளத்துடன் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  வட்டார தடய அறிவியல் ஆய்வகக் கட்டடம் என மொத்தம் 444 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கட்டடங்களை  முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

சென்னை, மாம்பலம் பகுதியில் வியாபார நிறுவனங்கள் அதிகமாக செயல்பட்டு வருவதாலும், தென்மாவட்டங்களிலிருந்து வரும் விரைவு ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதாலும், மாம்பலம் ரயில் நிலையத்திற்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதே போன்று ராஜீவ்காந்தி சாலையில் அதிகளவில் இயங்கி வரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிவோர் திருவான்மியூர் ரயில் நிலையத்திற்கு வந்து செல்வதாலும், மேற்படி இரண்டு ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், மாம்பலம் மற்றும் திருவான்மியூர் ரயில் நிலையங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு ரயில்வே காவல் நிலையங்கள்;

காஞ்சிபுரம் மாவட்டம் - செய்யூர், ஈரோடு மாவட்டம் - சென்னிமலை, திருப்பூர் மாவட்டம் - அவினாசி, கோயம்புத்தூர் மாவட்டம் - அன்னூர், நாகப்பட்டினம் மாவட்டம் - திருமருகல், புதுக்கோட்டை மாவட்டம் - கீரமங்கலம், மதுரை மாவட்டம் - அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 7 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள்; கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டடத்தில்  செயல்படும்  பொருளாதாரக் குற்றப்பிரிவு  அலுவலகம் ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

சென்னை மாநகர காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக 52 பொலீரோ ஜீப்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு அனைத்து இடங்களிலும் இலகுவாக செல்லும் 12 வாகனங்கள் என மொத்தம் 5 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 64 வாகனங்களை வழங்கும் அடையாளமாக முதலமைச்சர் ஜெயலலிதா ஐந்து காவல்துறை ஓட்டுநர்களுக்கு வாகனங்களுக்கான சாவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், கே. ராமானுஜம், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, காவல்துறை தலைமை இயக்குநர் அசோக் குமார்,  சென்னை மாநகர காவல்துறை ஆணையர் எஸ். ஜார்ஜ், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் / காவல்துறை கூடுதல் இயக்குநர் ஆர்.சி. குடாவ்லா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து