முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு முடிவு: ஜூன் 8–ந்தேதி பள்ளிகள் திறப்பு ?

செவ்வாய்க்கிழமை, 26 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே 27- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் கோடை வெயில் வறுத்து எடுத்து வருகிறது. தொடர்ந்து அனல் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இரு சக்கர வாகனங்களிலும், பஸ்களிலும் போக முடியாத அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது.

இதற்கிடையே கத்திரி வெயிலின் உச்சகட்ட தாக்கம் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. மே மாதம் முடிந்து ஜூன் முதல் வாரம் வரை வெயிலின் உக்கிரம் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. வெயிலின் தாக்குதலுக்கு சிறு குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பு ஜூன் 12–ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஜூன் 1–ந்தேதி திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில், புதுவையை போல் தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படவேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் ஏற்படும் என கருதப்பட்டது. இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா, வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தை முன் வைத்து பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அனைத்து பள்ளிகளும் திட்டமிட்டப்படி ஜூன் 1–ந்தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆனால் தற்போது பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளிகள் திறக்கப்படும் நாளை ஜூன் 8-ந் தேதிக்கு ஒத்திவைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.       

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து