முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் நிறைவடைந்தது

வியாழக்கிழமை, 28 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம், நிறைவடைந்தது. இன்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சத்து 88 ஆயிரம் விண்ணப்பங்கள் பொறியியல் கலந்தாய்வுக்கும், 35 ஆயிரம் விண்ணப்பங்கள் மருத்துவ கலந்தாய்வுக்கும் விநியோகிக்க்ப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் பொறியியல் கலந்தாய்வை நடத்தி வருகிறது. வரும் கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூலை 1 ந்தேதி தொடங்கி 31 ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி கடந்த 6 ந்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சிரமமின்றி விண்ணப்பங்களை பெற பிரம்மாண்டமான பந்தல்கள் போடப்பட்டிருந்தன. மாணவர்களுக்கான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளுடன் செய்யப்பட்டிருந்தன. நேற்றுடன் நிறைவடைந்த விண்ணப்பங்களின் விநியோகம் 1 லட்சத்து 88 ஆயிரத்து 504 என எட்டியிருக்கிறது.

விண்ணப்ப விநியோகத்தின் கடைசி நாளான நேற்று மட்டும் ஆயிரத்து 268 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கிறது.1 லட்சத்திற்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தை வந்தடைந்து இருப்பதாக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்திரியராஜ் தெரிவித்தார்.. சென்னை மாணவர்கள் இன்று மாலை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் வரும் ஜூன் 15 ந்தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும் என்றும் அதைத்தொடர்ந்து தரவரிசை பட்டியல் வரும் ஜூன் 19 ந்தேதி வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையே எம்.பி.பி.எஸ் மற்றும் பல் மருத்துவம் சார்ந்த பி.டி.எஸ் படிப்புக்கான விண்ணப்பங்கள் கடந்த 11 ந்தேதி முதல் வழங்கப்பட்டது. விண்ணப்பங்களின் விநியோகம் நேற்று முன்தினத்துடன் இதுவரை 35 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் 34 ஆயிரம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவத்தேர்வுக்குழுவுக்கு வந்திருப்பதாகவும் அதன் செயலாளர் டாக்டர் சுகுமார் தெரிவித்தார்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இன்று மாலைக்குள் வழங்க வேண்டுமென மருத்துவத்தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ். படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் வரும் ஜூன் 12 ந்தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எம்.பி.பி.எஸ் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு வரும் 19 ந்தேதி தொடங்கும் என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. மருத்துவம் மற்றும் பொறியியல் கலந்தாய்வு தேதிகள் அனைத்தும் தற்காலிகமாக அறிவிக்கப்பட்டவை என்றாலும் ஜூலை 31 ந்தேதிக்குள் இரு கலந்தாய்வையும் முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.எனவே இரு கலந்தாய்வும் அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே நடத்தி முடிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து