முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஐ.ஐ.டி. விவகாரம்: ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பதிலடி

சனிக்கிழமை, 30 மே 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - சென்னை ஐ.ஐ.டி.யில் பெரியார்- அம்பேத்கர் பெயரிலான மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்துள்ளார். பெரியார்- அம்பேத்கர் வாசகர் வட்டம் என்ற சென்னை ஐ.ஐ.டி., மாணவர் அமைப்பு, ஐஐடி-யின் பெயரைப் பயன்படுத்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருவதாக புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் அங்கீகாரத்தை சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் ரத்து செய்தது. இதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: மோடி அரசு குறித்து விமர்சனம் செய்ததற்காக ஐ.ஐ.டி. மாணவர் அமைப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது. மோடி அரசின் செயல்பாடு கருத்துச் சுதந்திரத்தையும், பேச்சு சுதந்திரத்தையும் நசுக்குவது போல உள்ளது. இதுபோன்ற முயற்சிகளை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார். ராகுலின் இந்தக் கருத்துக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஸ்மிருதி இரானி கூறியதாவது: மாணவர் காங்கிரஸ் அமைப்பினரின் பின்னால் நின்றுகொண்டு ராகுல் காந்தி சண்டையிடுகிறார்.

அவர் நேருக்கு நேர் நின்று போரிட கற்றுக்கொள்ள வேண்டும். நாட்டில் எங்கெல்லாம் ஒழுக்கமான சூழல் நிலவுகிறதோ, அங்கெல்லாம் ஒழுங்கீனத்தைக் கொண்டுவர வேண்டும் என நீங்கள் அறிவுறுத்தினீர்கள். அதற்கேற்ப, எனது வீட்டின் முன்பு நான் இல்லாத சமயத்தில் போராட்டம் நடத்தி அந்த ஒழுங்கீனத்தை அவர்கள் நிலைநாட்டி விட்டனர்.  இந்த மிரட்டலுக்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன் என உங்கள் குண்டர் படையிடம் கூறுங்கள். மத்திய அரசின் ஆட்சி தொடர்பான அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க நான் தயார். இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஸ்மிருதி இரானியின் வீட்டை இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து முன்கூடடியே தகவலறிந்த காவல் துறையினர், ஸ்மிருதி இரானி வீடு முன் தடுப்புகளை அமைத்திருந்தனர். இதையடுத்து, அங்கு கூடிய மாணவர் காங்கிரஸார், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், ஸ்மிருதி இரானிக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். போராட்டக்காரர்களில் சிலர், ஸ்மிருதி இரானி வீட்டுக்குள் நுழைய முற்பட்டனர். அப்போது காவல் துறையினருக்கும் மாணவர் காங்கிரஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து