முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதியின் மகள் செல்வி மீதான மோசடி வழக்கை பூந்தமல்லி நீதிமன்றம் 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

வியாழக்கிழமை, 4 ஜூன் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை: கருணாநிதியின் மகள் செல்வி மீதான மோசடி வழக்கை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று பூந்தமல்லி கோர்ட்டுக்கு, உயர்  நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.  சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் வி.நெடுமாறன். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், ‘தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி. இவரது மருமகன் டாக்டர் வி.எம்.ஜோதிமணி, தாழம்பூர் கிராமத்தில் 2.94 ஏக்கர் நிலத்தின் பொது அதிகாரம் தன்னிடம் உள்ளதாகவும், அந்த நிலத்தை விற்பனை செய்யப்போவதாகவும் கூறினார்.

இதையடுத்து அவரிடம் அந்த நிலத்தை ரூ.5.14 கோடிக்கு விலை பேசி, ரூ.3.50 கோடியை காசோலை மற்றும் ரொக்கமாக கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டவர், அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்து தரவில்லை. அதேநேரம், அந்த நிலத்தை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்து விட்டார். இந்த விவரம் தெரிந்தவுடன், நிலத்தின் உரிமையாளர் செல்வியை சந்திக்கச் சென்றபோது, என்னை டாக்டர் ஜோதிமணி அடித்து மிரட்டினார்’ என்று கூறியிருந்தார். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், டாக்டர் ஜோதிமணி, செல்வி ஆகியோர் மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை சுமத்தி, குற்றப்பத்திரிகையை பூந்தமல்லி முதலாவது குற்றவியல் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீண்ட காலமாக விசாரணை இருந்து வருகிறது. இதையடுத்து சென்னை நீதிமன்றத்தில் நெடுமாறன் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘செல்வி, டாக்டர் ஜோதிமணி ஆகியோர் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள். எனவே, பூந்தமல்லி கோர்ட்டில் உள்ள அவர்கள் மீதான வழக்கை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்கும்படி உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி பி.என்.பிரகாஷ் விசாரித்து, ‘இந்த மோசடி வழக்கு கடந்த 2013-ம் ஆண்டு முதல் விசாரணையில் இருந்து வருகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கை பூந்தமல்லி நீதிமன்றம் 6 மாதத்துக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து